Wednesday, July 3, 2024
Home » எளிதாக தொழில் தொடங்கும் மாநிலங்களில் முதல் இடம் பிடிப்பதே இலக்கு: தென்மண்டல தொழில் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு; மதுரையில் ரூ.600 கோடியில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என அறிவிப்பு

எளிதாக தொழில் தொடங்கும் மாநிலங்களில் முதல் இடம் பிடிப்பதே இலக்கு: தென்மண்டல தொழில் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு; மதுரையில் ரூ.600 கோடியில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என அறிவிப்பு

by kannappan

மதுரை: எளிதாக தொழில் தொடங்கும் மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தை பிடிப்பதே நமது இலக்கு என்று மதுரையில் நேற்று நடந்த ‘தோள்‌ கொடுப்போம்‌ தொழில்களுக்கு’ தென்மண்டல மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மதுரையில் ரூ.600 கோடி மதிப்பீட்டில் புதிய முன்னோடி டைடல் பார்க் 5 ஏக்கர் பரப்பளவில் முதல்கட்டமாக அமைக்கப்பட இருக்கிறது. இது அமைந்தால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் முதல்வர் அறிவித்தார். மதுரை, அழகர்கோவில் ரோட்டில் உள்ள தனியார்  ஓட்டல் அரங்கத்தில் குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்கள்‌ துறை சார்பில்‌ நடந்த  ‘தோள்‌ கொடுப்போம்‌ தொழில்களுக்கு’ தென்மண்டல மாநாட்டில்‌ முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: தமிழ்‌ வளர்த்த மதுரை, இன்று தொழில்‌ வளர்ப்பிலும் முன்னணி வகிக்கிறது. மதுரை மாவட்டத்தில்‌ சுமார்‌ 50 ஆயிரம்‌ பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்கள்‌ இயங்கிக்‌ கொண்டிருக்கின்றன. இந்நிறுவனங்களின்‌ மூலம்‌ 3 லட்சத்து 37 ஆயிரம்‌ நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. மதுரையானது சுங்குடி சேலைகள்‌, ஆயத்த ஆடைகள்‌, வீட்டு உபயோக பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌, அப்பளத்திற்கு  பெயர்‌ பெற்றது. தமிழகத்தின்‌ தனித்தன்மையான பொருட்கள்‌ ஏராளமாக இருக்கின்றன. குறிப்பாக, புவிசார்‌ குறியீடு பெற்ற 42 பொருட்களில்‌ 18 பொருட்கள் தென்தமிழ்நாட்டைச்‌ சார்ந்தவை.இதுமட்டுமல்ல. புவிசார்‌ குறியீடு பெற விண்ணப்பித்துள்ள 25 வகையான பொருட்களில்‌ கம்பம்‌ பன்னீர்‌ திராட்சை, உடன்குடி பனங்கற்கண்டு, தூத்துக்குடி மக்ரூன்‌, சோழவந்தான்‌ வெற்றிலை, மார்த்தாண்டம்‌ தேன்‌ உள்ளிட்ட 14 வகையான பொருட்கள்‌ தென்‌ தமிழகத்தைச்‌ சேர்ந்தவை என்பது பெருமை. இப்பொருட்களுக்கு மிகப்‌ பெரிய அளவில்‌ வெளிநாடுகளில்‌ வரவேற்பு உள்ளதால் நமது  உற்பத்தியாளர்களும்‌, ஏற்றுமதியாளர்களும்‌ அதிக அளவில்‌ தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்‌. பெருங்குழுமத்‌ திட்டம்‌, குறுங்குழுமத்‌ திட்டம்‌ ஆகியவற்றை அரசு அறிவித்துள்ளது. இவ்வரிசையில் மதுரை மாவட்டம், விளாச்சேரியில் ரூ.3.63 கோடி அரசு மானியத்துடன் ரூ.4.03 கோடி திட்ட மதிப்பீட்டில் பொம்மைக்குழுமம், தூத்துக்குடியில் 100 சதவீத அரசு மானியத்துடன் ரூ.2.02 கோடி திட்ட மதிப்பீட்டில் ஆகாயத்தாமரைக்குழுமம். விருதுநகர் மாவட்டம், தளவாய்புரத்தில் ரூ.3.40 கோடி அரசு மானியத்துடன் ரூ.3.77 கோடி திட்ட மதிப்பீட்டில் மகளிர் நெசவுக்குழுமம் அமைப்பதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்‌ நரிக்குறவர்‌ பாசிமணி குழுமம்‌, திருநெல்வேலியில்‌ சமையல்‌ பாத்திரக்குழுமம்‌, திருப்பத்தூரில்‌ ஊதுபத்திக்‌ குழுமம்‌, சேலம்‌ மாவட்டம்‌ தம்மம்பட்டியில்‌ மரச்சிற்பக்‌ குழுமம்‌, கிருஷ்ணகிரியில்‌ மூலப்பொருட்கள்‌ கிடங்கு குழுமம்‌, ஈரோட்டில்‌ மஞ்சள்தூள்‌ உற்பத்தி செய்யும்‌ குறுந்தொழில்‌ குழுமம்‌, ஈரோடு மாவட்டம்‌, பவானியில்‌ ஜமுக்காளம்‌ உற்பத்தி செய்யும்‌ குறுந்தொழில்‌ குழுமம்‌, ஆகிய குழுமங்களுக்கு பொது வசதி மையம்‌ அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கோயம்புத்தூரில்‌ தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம்‌ கடந்த மாதம்‌ தொடங்கப்பட்டது. இதன்‌ மூலம்‌ மேற்கு மாவட்டங்கள்‌ மட்டுமல்லாமல்‌, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம்‌ ஆகிய தென்மாவட்டங்களிலுள்ள கயிறுத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ பயனடையும்‌. நாட்டில்‌ எளிமையாக தொழில்‌ புரிதல்‌ பட்டியலில்‌ தமிழ்நாடு 14வது இடத்தில்‌ இருந்து, தற்போது 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அடுத்து முதல்‌ இடத்தைப்‌ பிடிப்பதே நமது இலக்கு. ஸ்டார்ட்‌ அப்‌ இந்தியா வெளியிட்ட தரவரிசைப்‌ பட்டியலில்‌ பல படிகள்‌ முன்னேறி அரசின்‌ சிறந்த புத்தொழில்‌ செயல்பாடுகளுக்கான லீடர்‌ அங்கீகாரத்தைத்‌ தற்போது பெற்று இருக்கிறது. தமிழ்நாட்டை வரும் 2030க்குள்‌ 1 டிரில்லியன்‌ அமெரிக்க டாலர்‌ பொருளாதாரமாக மாற்றிட வேண்டும்‌ என்ற இலக்கை அடைய, ஏற்றுமதி வர்த்தகம்‌ மிகவும் முக்கியமாகும்‌. எனவே ஏற்றுமதியை ஊக்குவித்து வருகிறோம்‌. சென்னை போன்ற பெருநகரங்களில்‌ மட்டுமல்லாமல்‌, தமிழ்நாட்டின்‌ அனைத்துப்‌ பகுதிகளிலும்‌, புத்தொழில்‌ வளர்ச்சி பெற வேண்டும்‌ என்கிற நல்ல நோக்கத்தோடு, மதுரை, திருநெல்வேலி மற்றும்‌ ஈரோடு மாவட்டங்களில்‌ வட்டாரப்‌ புத்தொழில்‌ மையங்கள்‌ அண்மையில்‌ என்னால்‌ தொடங்கி வைக்கப்பட்டது. மூன்று வட்டார புத்தொழில்‌ மையங்களில்‌ இரண்டு தென்‌ தமிழகத்தில்‌ அமைக்கப்பட்டுள்ளன.கடந்த 2000ம்‌ ஆண்டு முத்தமிழறிஞர்‌ கலைஞரால், சென்னையில்‌ திறந்து வைத்த டைடல்‌ பூங்கா, மாநிலத்தினுடைய தகவல்‌ தொழில்நுட்ப புரட்சிக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. தொழில்நுட்ப புரட்சியை தமிழ்நாட்டின்‌ இரண்டாம்‌ மற்றும்‌ மூன்றாம்‌ கட்ட நகரங்களுக்கு எடுத்துச்‌ செல்ல, டைடல்‌ நிறுவனம்‌, கோயம்புத்தூர், திருப்பூர்‌, விழுப்புரம்‌, தூத்துக்குடி, தஞ்சாவூர்‌ சேலம்‌, வேலூர்‌ மற்றும்‌ ஊட்டி ஆகிய இடங்களில்‌ பூங்காக்களை உருவாக்கி வருகிறது. தகவல்‌ தொழில்நுட்பம்‌ மற்றும்‌ அறிவு சார்ந்த தொழில்களுக்கான முக்கிய மையமாக மதுரையை மாற்றும்‌ வகையில்‌ டைடல்‌ மற்றும்‌ மதுரை மாநகராட்சி இணைந்து ஒரு முன்னோடி டைடல்‌ பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த பூங்கா டைடல்‌ லிமிட்டெட்‌ நிறுவனத்தால்‌, இயக்கப்பட்டு நிர்வகிக்கப்படும்‌.மதுரை நகரின்‌ மையப்பகுதியான மாட்டுத்தாவணியில்‌ இரு கட்டங்களாக  பூங்கா கட்டப்படும்‌. முதற்கட்டமாக, ரூ.600 கோடி திட்ட மதிப்பீட்டில்‌, 5 ஏக்கரில்‌ அமைக்கப்படும்‌. இரண்டாம்‌ கட்டத்தில்‌, மேலும்‌ 5 ஏக்கரில்‌ இரட்டிப்பாக்கப்படும்‌. இப்‌பூங்காவானது, தகவல்‌ தொழில்நுட்பம்‌ மற்றும்‌ தகவல்‌ புதிய தொழில்நுட்பங்களுக்கு தரமான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதுடன்‌ மதுரை மண்டலத்தின்‌ பொருளாதார வளர்ச்சிக்கும்‌, அது வழிவகுக்கும்‌. முதல்‌ கட்டத்தில்‌ 10,000 பேர்‌ வேலைவாய்ப்பு பெறுவர்‌. தொழில்‌ வளர்ச்சியை அந்த தொழில்‌ நிறுவனங்களின்‌ வளர்ச்சியாக மட்டும்‌ பார்ப்பது இல்லை. அதன்‌ மூலமாக வேலை வாய்ப்புகள்‌ கிடைக்கிறது. எனவே பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின்‌ வளர்ச்சியாகவே பார்க்கிறோம்‌. வட்டாரம்‌, மாவட்டம்‌ வளர்ச்சியைப்‌ பெறுகிறது. இதன்‌ மூலமாக மாநிலத்தின்‌ வளர்ச்சிக்‌ குறியீடானது வளர்கிறது. இந்த வகையில்‌, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள்‌ அனைத்தையும்‌ மாநிலத்தின்‌ வளர்ச்சிக்கு மிக, மிக அவசியமானவை. உங்களது தேவைகளைச்‌ சொல்லுங்கள்‌, நிறைவேற்றித்‌ தருகிறோம்‌. தமிழ்நாட்டுக்கு நிலையான வளத்தை நீங்கள்‌ உருவாக்கித்‌ தாருங்கள்‌. இவ்வாறு அவர் பேசினார்.* ‘சொத்தின் மீது கடன் பதிவு செய்ய தேவையில்லை’முதல்வர் மேலும் கூறுகையில், ‘‘தொழில்‌ வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் தொழில்‌ முனைவோர்கள்‌ சொத்து பிணையம்‌ கொடுத்து கடன்‌ பெறும்போது, சொத்தின்‌ மீது கடன்‌ பெற்றுள்ளதை உரிமைப்பத்திரம்‌ ஒப்படைத்து சார்‌ பதிவாளர்‌ அலுவலகத்தில்‌ பதிவு செய்கின்றனர்‌. அதே சொத்தின்‌ மீது கூடுதல்‌ கடன்‌ பெறும்போது திரும்பவும்‌ பதிவு செய்ய வேண்டிய முறை தற்பொழுது நடைமுறையில்‌ உள்ளது. ஒரு சொத்தின்‌ மீது எத்தனை முறை கூடுதல்‌ கடன்‌  பெற்றாலும்‌, அத்தனைமுறையும்‌ சார்‌ பதிவாளர்‌ அலுவலகத்தில்‌ பதிவு செய்ய வேண்டும்‌. இதனால்‌ காலவிரயம்‌ ஏற்படுவதுடன்‌ கடன்‌ பெறுவதிலும்‌ காலதாமதம்‌ ஏற்படுகிறது. இந்தநடைமுறையை மாற்றி, அதே சொத்தின்‌ மீது கூடுதல்‌ கடன்‌ பெறும்போது பதிவு செய்யத்‌ தேவை இல்லை என்ற நடைமுறை கொண்டு வரப்படும்‌’’ என்றார்….

You may also like

Leave a Comment

two + thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi