எலக்ட்ரிக் பைக் தீ பிடித்து எரிந்ததில் பயங்கரம்; 5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து: பெண் உள்பட 8 பேர் கருகி பலி: 13 பேர் படுகாயம்

திருமலை: எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்ததில் 5 மாடி கட்டிடத்திற்கு தீ பரவியது. இதில் லாட்ஜில் தங்கியிருந்த பெண் உள்பட 8 பேர் பரிதாபமாக இறந்தனர். 13 பேர் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே 5 மாடி கட்டிடத்தின் கீழ் தளத்தில் எலக்ட்ரிக் பைக் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமின் மேல்மாடியில் லாட்ஜ் இயங்கி வருகிறது. நேற்று பைக் ஷோரூமில் வழக்கம்போல் பணிகள் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு பிறகு ஒருசில ஊழியர்கள் மட்டும் இருந்தனர். 10.30 மணியளவில் ஷோரூமில் சார்ஜ் போடப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ வேகமாக பரவி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 23 பைக்குகளும் தீப்பிடித்து எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ வேகமாக பரவியதால் ஷோரூமில் இருந்து வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து செகந்திராபாத் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தீ மேல்மாடியில் உள்ள லாட்ஜிக்கு பரவியது. லாட்ஜில் உள்ள 23 அறைகளில் 24 பேர் தங்கியிருந்தனர். லாட்ஜில் ஏசி இருந்ததால் தீ வேகமாக பரவி கடும் புகை ஏற்பட்டது. இதனால் லாட்ஜில் தங்கியிருந்த சிலர் ஜன்னல் வழியாக மாடியில் இருந்து கீழே குதித்தனர். பலர் காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். தகவல் அறிந்து 8 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும்  தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர். 5 மாடி கட்டிடத்திற்கு ஒரே வழி மட்டும் இருந்ததால் தீயை அணைக்கும் பணியில் கடும் சிரமம் ஏற்பட்டது. இதனால் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் லாட்ஜில் தங்கியிருந்த 7 பேர் உடல் கருகியும், மூச்சு திணறல் ஏற்பட்டும் சடலமாக மீட்கப்பட்டனர். 13 பேர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு ஐதராபாத் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஒரு பெண் பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்தது. மேலும் 5பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ₹2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு ₹50 ஆயிரமும் வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்….

Related posts

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்ன பிரசாதத்தில் பூரான்

தேர்தல் பத்திர வழக்கு: மறு ஆய்வு மனு தள்ளுபடி