எம்.புதுப்பட்டியை தலைமையிடமாக கொண்டு தனித் தாலுகா உருவாக்க கோரிக்கை

சிவகாசி, ஆக.4: சிவகாசி தாலுகாவில் 54 ஊராட்சிகளில், நாரணாபுரம் புதுார், ஆனையூர், ஆலமரத்துப்பட்டி, விஸ்வநத்தம், எம்.புதுப்பட்டி, சுக்கிரவார்பட்டி, நடுவப்பட்டி, வடபட்டி, செங்கமலநாச்சியார்புரம், காளையார்குறிச்சி உட்பட சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் சிவகாசி, திருத்தங்கல், மங்கலம், சல்வார்பட்டி என 4 பிர்காவாக பிரிக்கப்பட்டு சிவகாசி தாலுகா அலுவலகம் இயங்கி வருகின்றது.
இதில் எரிச்சநத்தம், எம்.புதுப்பட்டி, காளையார்குறிச்சி, மங்கலம் உட்பட பல்வேறு கிராம மக்கள் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சிவகாசி தாலுகா அலுவலகத்திற்கு தனிப்பட்டா, நிலங்கள் பட்டா மாற்றம், வீட்டு மனைப் பட்டா, பெயர் மாற்றம் என பல்வேறு சான்றிதழ் தேவைக்காகவும் மனு செய்ய வரவேண்டியுள்ளது.

இதனால் பொதுமக்கள் நீண்ட அலைச்சலை சந்தித்து வருகின்றனர். கிராம மக்களின் நலன் கருதி எம்.புதுப்பட்டியை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகாவாக உருவாக்க வேண்டும் என்று ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எம்.புதுபட்டி தனி தாலுகாவாக உருவாகும் பட்சத்தில் இப்பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் பெரிதும் பயன் அடைவர்.
எம்.புதுபட்டி காசிராஜன் கூறும்போது, எங்கள் கிராம பகுதியிலிருந்து வருவாய் குறித்த அனைத்து சான்றிதழ்களும் வாங்க சிவகாசி தாலுகா அலுவலகத்திற்குதான் செல்ல வேண்டியுள்ளது. எங்கள் கிராமங்களிலிருந்து போதிய பஸ் வசதி சிவகாசிக்கு இல்லை. இதனால் மிகவும் அவசரமான சான்றுகள் வாங்க மட்டுமே சிவகாசிக்கு செல்வோம். கிராம மக்களின் அலைச்சலை தவிர்க்கும் வகையில் எம்.புதுபட்டியை தனி தாலுகாவாக மாற்ற வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம் என்றார்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து