எம்பி, எம்எல்ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்கை வாபஸ் பெற மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு: உச்ச நீதிமன்றம் விளக்கம்

புதுடெல்லி: ‘எம்பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு, என்றாலும் உயர் நீதிமன்ற அனுமதி பெறுவது அவசியம்,’ என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. நாடு முழுவதும் உள்ள எம்பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகள் அனைத்தையும் விரைந்து விசாரித்து முடிக்க மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி தனது இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்த விவகாரம் தொடர்பாக விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும். விசாரணை அமைப்புகளின் விசாரணை குறித்து எந்த கருத்தையும் கூறி அவர்களின் மன உறுதியை குலைக்க நாங்கள் விரும்பவில்லை. ஆனாலும், அவர்களின் அறிக்கையே அவர்களைப் பற்றி சொல்கிறது. இந்த நீதிமன்றத்திலேயே எம்பி.க்கள், எம்எல்ஏ.க்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை விசாரிக்கும் 200க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவற்றில் விசாரணை அமைப்புகள் தரும் அறிக்கைகள் முழுமையாக இல்லை. அதே சமயம், முந்தைய ஆட்சியில் போடப்பட்ட வழக்கு என்ற ஒரு காரணத்தை மட்டும் கூறி மாநில அரசுகள் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுகின்றன. இதுபோன்று வழக்கை வாபஸ் பெறும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு. ஆனாலும், கூட உயர் நீதிமன்றத்தை அணுகி முறையான சட்ட விவகாரங்களை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும் என்றே நாங்கள் கூறுகிறோம்.இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.* விசாரணையை தீவிரப்படுத்த என்ன செய்ய போகிறீர்கள்?தலைமை நீதிபதி ரமணா தனது உத்தரவில் மேலும், ‘எந்த நியாயமான காரணமும் இல்லாமல் சில வழக்குகளில் 10-15 ஆண்டாக குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படாமல் உள்ளது. அமலாக்கத்துறை சார்பில் 76 வழக்குகள் 2012ல் இருந்து தற்போது வரை விசாரணை எதுவுமின்றி நிலுவையில் இருக்கிறது. சிபிஐ தரப்பில் 2000ம் ஆண்டிலிருந்து நிலுவையில் இருக்கும் வழக்குகள் உள்ளன. விசாரணை அமைப்புகளில் போதிய அதிகாரிகள் இல்லாதது போன்ற பிரச்னைகளையும் நாங்கள் அறிவோம். ஆனாலும், அரசு தரப்பு இந்த விவகாரத்தில் ஏதாவது செய்தாக வேண்டும். விசாரணையை விரைவுபடுத்த என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரிவியுங்கள்,’ என்று தெரிவித்தார்….

Related posts

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

ஒரே நாடு ஒரே தேர்தல் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு