என்ஐஏ அதிகாரிகள் என ஏமாற்றி வீடு, கடையில் சோதனை நடத்தி ரூ.30 லட்சம் சுருட்டிய ஆசாமிகள்: மண்ணடியில் பரபரப்பு

தண்டையார்பேட்டை: சென்னை மண்ணடியில் என்ஐஏ அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு, வீடு மற்றும் கடைகளில் சோதனை நடத்தி ரூ.30 லட்சத்தை சுருட்டிக்கொண்டு ஓடிய ஆசாமிகள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அப்துல்லா (36), மாலிக் (34), செல்லா (35),  சித்திக் (35). இவர்கள், கூட்டாக சென்னை மண்ணடி மலையப்பன் தெருவில் வீடு எடுத்து தங்கியிருந்து, பர்மா பஜார் பகுதியில் செல்போன் மொத்த விற்பனை கடை நடத்தி வருகிறார்கள். நேற்று மண்ணடியில் உள்ள அப்துல்லா வீட்டிற்கு வந்த 3 பேர் என்ஐஏ அதிகாரிகள் என்றும், வீட்டில் சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறி சோதனை செய்துள்ளனர். அப்போது, வீட்டில் இருந்த 10 லட்சம் ரூபாய் ரொக்கத்தை எடுத்துக் கொண்டனர். மேலும், செல்போன் வாங்குவதில் முறைகேட்டில் ஈடுபடுவதாக உங்கள் புகார் வந்துள்ளது என்று கூறி அவர்களை பர்மா பஜாரில் உள்ள கடைக்கு அழைத்துச் சென்று கடையில் சோதனை நடத்தியதுடன் அங்கிருந்து 20 லட்ச ரூபாய் எடுத்துக்கொண்டு தப்பி விட்டனர். பின்னர் தான், தாங்கள் ஏமாற்றப்பட்டது அப்துல்லாவுக்கு தெரிய வந்தது. இதுகுறித்து அப்துல்லா மற்றும் நண்பர்கள் முத்தியால்பேட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். துறைமுகம் உதவி ஆணையர் வீரக்குமார் மேற்பார்வையில் முத்தியால்பேட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் இளங்கோ தலைமையில் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய மூன்று பேரை தேடி வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் மண்ணடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

Related posts

பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தென்காசியில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு வலை