எதிரிக்கட்சி தலைவராக செயல்படாமல் எடப்பாடி எதிர்க்கட்சி தலைவராக செயல்பட வேண்டும்: அமைச்சர் சக்கரபாணி கண்டனம்

சென்னை: தமிழக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, கடந்த 23ம் தேதி தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் மாநில எல்லையோர பகுதிகளில் தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொது விநியோக திட்ட அரிசி ஆந்திராவிற்கு கடத்தப்பட்டு, அவை அங்கு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் அவை வெளிச்சந்தை விற்பனைக்கும், கர்நாடக மாநிலத்தில் விற்பனைக்கும் அனுப்பப்படுகிறது, ரேஷன் அரிசி கடத்தப்படும் வழித் தடங்களையும் குறிப்பிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார். சந்திரபாபு நாயுடு கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனத்தின் உரிமையாளர் 24ம் தேதியே கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும், அவரிடம் இருந்து 1200 கிலோ பொது விநியோக திட்ட அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் மீது இத்துறையில் 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. எல்லையோர மாவட்டங்களில் அவர்கள் ஆட்சியின் கடைசி இரண்டு ஆண்டுகளில் 8739.46 குவிண்டால் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஓராண்டில் மட்டும் 12,540.87 குவிண்டால் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆகும். இந்த ஓராண்டில் மட்டும் 23 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளில் கைது செய்யப்பட்டவர்கள் 904 பேர். ஆனால் ஓராண்டில் கைது செய்யப்பட்டவர்கள் 836 பேர். சென்னை, வேலூர், சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் மட்டுமல்லாமல் திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையின் காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடத்தல் நடைபெறுவதாக சந்தேகிக்கப்படும் வழித்தடங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்த இவ்வழித்தடங்களில் வீடியோ கேமரா மூலம் வாகன நகர்வை கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2020-21ம் ஆண்டை விட 2021-22ம் ஆண்டில் 7 லட்சத்து 40 ஆயிரம் அரிசி குறைவாக நுகர்வு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசுக்கு ₹2633 கோடி மீதமானதோடு, தமிழ்நாடு அரசுக்கு ₹1600 கோடி அளவிற்கு மீதமாகியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பாணியில் அரசுக்கு ₹1600 கோடி மீதமாவதுதான் நிர்வாக சீர்கேடு போலும். எடப்பாடி பழனிசாமி, எதிரிக்கட்சி தலைவராக செயல்படாமல் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்