எண்ணூரில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

 

திருவொற்றியூர், ஜூலை 29: எண்ணூர் பேருந்து நிலையத்திலிருந்து கோயம்பேடு, தாம்பரம், உயர் நீதிமன்றம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பேருந்துகளில் பொதுமக்கள் செல்கின்றனர். ஆனால் பயணிகளின் எண்ணிக்கை ஏற்ப இங்கு போதிய பேருந்து வசதி இல்லை. இதனால் சென்னைக்குச் செல்ல வேண்டியவர்கள் பல மணி நேரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் பேருந்து நிலையமும் பழுதடைந்து காணப்பட்டது.

இதையடுத்து, கே.பி.சங்கர் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 கோடி, சிஎஸ்ஆர் நிதியில் ரூ.1 கோடி என ரூ.3 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் சீரமைக்க திட்டமிடப்பட்டு இதற்கான பணியும் துவக்கப்பட்டது. மேலும் இங்கு கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு கே.பி.சங்கர் எம்எல்ஏ கோரிக்கை விடுத்து இதற்கான மனுவையும் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், எண்ணூர் பேருந்து நிலையத்திலிருந்து கூடுதலாக பேருந்துகளை இயக்க கோரியும், அடிப்படை வசதி இல்லாத பேருந்து நிலையத்தை விரைவாக சீரமைக்க வலியுறுத்தியும், எண்ணூர் மக்கள் நல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் எண்ணூர் பஜார் தெருவில் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து