எடையளவுகள் மறுமுத்திரையிடப்படாமல் இருந்தால் ரூ. 10 ஆயிரம் அபராதம்

கோவை, ஏப். 4: கோவை தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) தலைமையில் அனைத்து தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் இணைந்து இம்மாதத்தில் சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகள் தொடர்பாக கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த மார்ச் மாதம் முழுவதும் சிறப்பு கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இது குறித்து கோவை தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) கூறியிருப்பதாவது: இந்த ஆய்வின்போது சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் ஹார்டுவேர், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்பொருட்கள் விற்கும் கடைகள், காய்கறி மற்றும் பழக்கடைகள் விற்பனை கூடங்களில் எடை குறைவு, முத்திரை அல்லது மறுமுத்திரை இடப்படாத எடை அளவுகள் வைத்திருத்தல், தரப்படுத்தப்படாத எடையளவுகள், மறுபரிசீலனை சான்றுகாட்டி வைக்கப்படாமை, சோதனை எடைக்கற்கள் வைத்திருக்காதது தொடர்பாக 28 முரண்பாடுகளும், பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் சிகரெட் லைட்டர்கள், வெளிநாட்டுப் பொருட்கள் மற்றும் காய்கறி மற்றும் பழக்கடைகள் விற்பனை கூடங்களில் பொட்டலமிடுவதற்கான உரிய பதிவு சான்று பெறாதது, உரிய அறிவிப்பு இல்லாதது, அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதவ் விலைக்கு விற்பனை செய்தல், அறிவிப்பு விலைப்பட்டியல் தொடர்பாக 21 முரண்பாடுகளும் கண்டறியப்பட்டு சம்மந்தப்பட்ட கடை நிறுவன உரிமையாளர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் கோவை ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர் உழவர்சந்தை மற்றும் வெள்ளலூர் வாரசந்தையில்உள்ள காய்கறி, பழம் மற்றும் இதர பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் எடையளவு சட்டத்தின் கீழ் 42 ஆய்வுகள் மேற்கொண்டதில் 32 மின்னணு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இதுபோன்ற ஆய்வுகள் இனிவரும் காலங்களில் தொடர்ந்து நடத்தப்பட உள்ளது. எனவே அனைந்து சந்தைகளிலும் இதுவரை அரசிடம் உரிய தொகை செலுத்தி ஓராண்டிற்குள் முத்திரையிடப்படாமல் பயன்படுத்தி வரும் எடையளவுகளை டாக்டர் பாலசுந்தரம் ரோடு ஆர்.டி.ஒ. அலுவலகம் பின்புறம் உள்ள சம்பந்தப்பட்ட முத்திரை ஆய்வாளர் அலுவலகங்களுக்கு சென்று முத்திரையிட்டு கொள்ளவேண்டும். பயன்படுத்த இயலாத நீண்ட ஆண்டுகள் முத்திரையிடாமல் உள்ள எடையளவுகளை கழித்துவிட்டு புதிய எடையளவுகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். எடையளவுகளை உரிய காலத்திற்குள் மறுமுத்திரையிடப்படாமல் இருந்தால் அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு