எச்சரிக்கை அவசியம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழைக்காலம் துவங்கிவிட்டது. தலைநகர் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இது, கனமழையாக உருவெடுத்து, பேரழிவை ஏற்படுத்தும் முன்னர், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது அவசியமாகிறது. கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் இறுதியில், சென்னையில் பெருமழை பெய்து, மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. தலைநகரே தண்ணீரில் மிதந்தது. கடந்த காலத்தில், வடகிழக்கு பருவமழையின்போது, ஒக்கி புயல், வர்தா புயல், கஜா புயல் போன்றவை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தின.இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு, தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏரிகள், நீர்நிலைகள், நீர்வழித்தடங்கள், ஆறுகள் போன்றவற்றில் தூர்வாரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்று  வரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  சமீபத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சென்னைக்கு குடிநீர்  வழங்கும் புழல் ஏரி நிரம்பி வருவதையும் பார்வையிட்டார். பருவமழை  முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து துறை  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். என்னென்ன தடுப்பு  நடவடிக்கை மேற்கொள்ள முடியுமோ, அத்தனை பணிகளையும் துரிதப்படுத்த அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சவால்களை திறம்பட கையாள்வது, நீர்நிலைகள், கால்வாய்கள், அணைக்கட்டுகளின் கதவுகள், கரைகளை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்த அறிவுரைகள், அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. கடந்தகால புயல் பாதிப்புகளின்  அடிப்படையில், முன்னெச்சரிக்கை பணிகளை அரசு அதிகாரிகள் மேற்கொண்டு  வருகின்றனர். மக்களுக்கு நிவாரண பொருட்கள் தேவைப்படும் பட்சத்தில், அவற்றை  உடனடியாக வழங்கவும் ஆயத்தமாகி வருகின்றனர். தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒருபுறம் இருந்தாலும், இன்னொருபுறம் மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியமாகிறது.  மழை வெள்ள பாதிப்பைவிட, பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் நோயின் பாதிப்பு இன்னும் கொடூரமானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும்  வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் தாக்குகிறது. மாவட்ட அளவில் நாள்தோறும் 20 பேர் முதல் 30 பேர் வரை டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக அந்தந்த அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். மழைக்காலங்களில் அசுத்தமான குடிநீர் குடிப்பது, மழைநீரில்  நனைந்த உணவுகளை உண்பது போன்ற காரணங்களால் சளி மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்னை  ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் மற்றும் ஆஸ்துமா பாதிப்பு இருப்பவர்கள் இன்னும் கூடுதலான சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, மழைக்காலத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது ஒவ்வொரு தனி மனிதனின் கடமை ஆகும்….

Related posts

தடை விலகியது

தங்க அம்பாரி

போர் உச்சக்கட்டம்