Tuesday, July 2, 2024
Home » எங்கும் எதிலும் பரந்தாமனே!

எங்கும் எதிலும் பரந்தாமனே!

by kannappan
Published: Last Updated on

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 24 (பகவத் கீதை உரை)ஒரு பக்திமான், தான் வசிக்கும் பகுதியிலேயே விபசார தொழில் செய்யும் ஒரு பெண்ணிடம் கோபித்துக்கொண்டார். ‘நீ அதர்ம காரியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாய். நீ செய்யும் பாவச் செயல்களால் உனக்கு நரகம்தான் விதிக்கப்படும். இனியாவது இத்தொழிலை விட்டுவிடு. உனக்கு நற்பேறு கிடைக்கும்’ என்று கடிந்து அறிவுறுத்தினார்.‘ஆனால் எனக்கு இந்தத் தொழிலை விட்டால் வேறு ஒன்றும் தெரியாதே. அப்படியே நான் வேறு தொழிலை மேற்கொள்ள விரும்பினாலும் அதை எனக்கு யார் தருவார்? என்னைப்பற்றித் தெரிந்த யாரும் என்னை அனுபவிக்கத்தான் ஆசைப்படுவாரே தவிர, நான் திருந்தி வாழும் வகையில், சமுதாயம் அங்கீகரிக்கும் ஏதேனும் ஒரு வேலையை அளிக்க முன்வருவாரா?’ என்று அழுதபடி கேட்டாள்.அவரோ, ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ இந்தத் தொழிலை விடத்தான் வேண்டும்,’ என்று அறுதியிட்டுக் கூறினார். அவளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன்னுடைய பசியைத் தீர்த்துக் கொள்ள, தன் உடலை பிறர் பசிதீர, அவள் அர்ப்பணிக்க வேண்டியிருந்தது. ஆகவே வேறு வழியின்றி அந்தத் தொழிலைத் தொடர்ந்தாள். ஆனால், கூடவே தான் செய்யும் தவறை மன்னிக்கும்படி இறைவனிடம் மன்றாடி வேண்டிக் கொண்டாள். தான் எவ்வளவு அறிவுறுத்தியும் அவள் தன் போக்கிலேயே போவதைக் கண்டு வெகுண்டார் பக்திமான். அவள் இன்னும் எத்தனை பேரைப் பாவியாக்குகிறாள் என்று கணக்கெடுக்கத் தொடங்கினார். சில நாட்களிலேயே அது பத்து, இருபது, ஐம்பது, நூறு என்றானதும் அவர் கடுங்கோபம் கொண்டார். வேகமாக அவளுடைய வீட்டிற்குச் சென்றார். ‘நான் எவ்வளவு சொல்லியும் நீ திருந்துவதாக இல்லை. இதோ பார், எத்தனை பேரை நீ பாவியாக்கியிருக்கிறாய்’ என்று சொல்லித் தன் கணக்கைக் காட்டினார். அவளோ, ‘என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு வேறு வழி தெரியவில்லை. ஆனாலும் நான் தினந்தோறும், ஒவ்வொரு மணிதோறும் இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்’ என்றாள்.இருவருடைய வாழ்க்கையும் ஒரே நாளில் முடிவுக்கு வந்தன. மேலுலகத்தில் அந்தப் பெண்ணை சொர்க்கத்துக்கும், பக்திமானை நரகத்துக்குமாக இறைவன் வழிகாட்டினார். கொதித்துப் போனார் பக்திமான். ‘இது அக்கிரமம், அநியாயம். கடவுளே நெறி பிறழ்கிறார்,’ என்றெல்லாம் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார்.‘இது, சரியான தீர்ப்புதான்,’ இறைவன் சொன்னார். உன்னுடைய பணியைப் புறக் கணித்துவிட்டு இவளுடைய பாவங்களைக் கணக்கெடுத்துக் கொண்டிருந்த உனக்கு நரகம்தான் சரி. தான் தினமும் பாவம் செய்கிறோம் என்பதை மனப்பூர்வமாக உணர்ந்த இவள் அதற்காக ஒவ்வொரு முறையும் என்னிடம் மன்னிப்பு கோரியிருக்கிறாள். ஆகவே இவள் உத்தமமானவள். சொர்க்கத்துக்குத் தகுதியானவள்.‘பக்திமானுக்குப் பேச்செழவில்லை. அவரவர் சேவையை அவரவர் ஆற்றிக் கொண்டிருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. அந்தப் பெண், பாவம் புரிகிறாள் என்று கருதிக் கொண்டு, அவளைத் திருத்துவதாக நினைத்துக் கொண்டு, அவளுடைய செயல்களையே கவனித்துக் கொண்டு, தன் இறைச்சேவையைக் கோட்டை விட்டவர் பக்திமான். தன்னையறியாமல் அவள்பால் தனக்கும் ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டதோ? பிறரெல்லாம் அவளை அனுபவிக்கிறார்களே, தன்னால் அது இயலவில்லையே என்ற ஏக்கமே கோபமாக மாறியதோ? அதுவே அவள் மீதான குரோதமானதோ..! அவருடைய எண்ணம்தான் எவ்வளவு கேவலமாக இருந்திருக்கிறது!பிறருடைய பாவங்களைக் கணக் கெடுக்கும் அந்த பக்திமானுடைய வேலையை எந்த ஒரு ஞானியும் செய்யமாட்டான். தன்னை மிகவும் உத்தமனாகக் கருதிக்கொண்டு பிறரை பாவிகளாக பாவிக்கும் செயலை ஒரு ஞானி புரியமாட்டான். தன்கர்மாக்களை சிரமேற்கொண்டு அதிலேயே அவன் பெருநாட்டம் கொண்டிருப்பானே அல்லாது பிறர் விவகாரங்களில் அனாவசியமாக மூக்கை நுழைக்கமாட்டான். ஒவ்வொருவருக்கும் அவரவர் கர்மாதான் பிரதானம் என்ற கொள்கை உடையவன் ஆதலால், அவனுடைய ஆர்வம் அவனை மீறியதாக இருக்காது; அவனுடைய எல்லையைக் கடந்ததாக இருக்காது. ஏனென்றால் அவனுடைய நிலைப்பாடெல்லாம் பரம்பொருள் மீதே இருக்கிறது. அதனாலேயே அவன் லௌகீக விஷயங்களில் ஈடுபட்டிருந்தாலும், அந்த உணர்வுகளிலிருந்து அவனால் விலகி இருக்க முடிகிறது. தனிப்பட்ட முறையில் எந்தப் பற்றுதலையும் வளர்த்துக் கொள்ளாமலும் இருக்க முடிகிறது. ராகத்வேஷவியுக்தைஸ்து விஷயானிந் த்ரியைஸ்சரன்ஆத்மவச்யைர்விதேயாத்மா ப்ரசஸாதமதிகச்சதி (2:64)‘‘விருப்பையும், வெறுப்பையும் ஒருங்கே பாவிப்பவன், அவற்றுடன் எந்த சம்பந்தமும் கொள்ளாதவன், ஆத்மவசப்பட்டவனாக வாழ்பவன் – இவனே தன் மனதை அடக்கியவனாகிறான்.  அதனாலேயே அவனால் மனத்தெளிவு அடைய முடிகிறது.’’கண்கள் பரந்தாமனைப் பார்க்கின்றன. அந்த அழகிய சொரூபத்தில் லயித்து விடுகின்றன. அதனாலேயே மனசும் பரந்தாமனை மட்டும் நினைக்கிறது.இப்படி இறைவனை கண்களால் உணர்ந்து கொண்ட ஒருவனுக்கு அவன் பார்ப்பவை எல்லாமே இறையம்சமாகவே தெரியும். காணும் வடிவங்கள், பொருட்கள், உயிருள்ளவை, உயிரற்றவை, இயற்கைக் காட்சிகள், செயற்கையாக உருவாக்கப்பட்டவை, பூச்சிகள், புழுக்கள், பறவைகள், மிருகங்கள், மனிதர்கள் என்று எதைப் பார்த்தாலும் அதில் தெய்வ சொரூபத்தைப் பார்க்கும் கண்களைக் கொண்டிருப்பவனே ஞானி. பார்ப்பனவற்றில் பேதம் காணாததாலும், அந்த எல்லாவற்றிலும் பரந்தாமனையே காண்பதாலும் அவன் உறுதியான மனதினனாகிறான். ஒரு ஞானி தன் சீடர்களுக்கு இதைத்தான் போதித்தார். எல்லாமே பரம்பொருளாகத் தோன்றும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று உபதேசித்தார். ஒருநாள் அவருடைய சீடன் ஒருவன் அவர் உபதேசத்தை ஆழ்ந்து உள்வாங்கிக்கொண்டவனாக வீதிவழியே சென்றுகொண்டிருந்தான். அப்போது சற்றுத் தொலைவில் ஒரு யானை வெகுண்டு ஓடி வந்தது.  ஏதோ மதம் அதற்கு, அதனால்தான் அத்தனை சீற்றம். அதன் மேல் அமர்ந்துகொண்டிருந்த பாகன் அதை அடக்கத் தன்னாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தான்; எதிர்ப்படும் மக்களையெல்லாம் யானையின் பாதையைவிட்டு விலகிச் செல்லுமாறு பரிதவிப்புடன் கோரி, கத்திக்கொண்டிருந்தான். தன் எதிரே ஆக்ரோஷத்துடன் வரும் யானையைப் பார்த்தான் சீடன். அந்த யானையில் அவன் பரந்தாமனைக் கண்டான். அப்படியே நெக்குருகி நின்றுவிட்டான். அது நடுச்சாலை என்பதை உணராமல், எந்த கணத்திலும் யானைத் தன்னைத் தாக்கக்கூடும் என்ற ஆபத்தை உணராமல், யானையில் இறைவனைக் கண்டுபுளகாங்கிதமடைந்தான். ஆனால் யானையோ இவனருகே வந்து தன் தும்பிக்கையால் அவனைப் பற்றி, சுழற்றி அப்படியே தூக்கி எறிந்தது. பதறிப்போனான் சீடன். ‘என்ன அநியாயம் இது? குருவின் உபதேசப்படிதானே நான் நடந்துகொண்டேன்? எனக்கு இப்படி ஒரு தண்டனையா?’ என்று கதறினான். சீடனைத் தாக்கியதில் மதம் இறங்கி சமாதானமடைந்ததோ என்னவோ யானை நிதானத்துக்கு வந்து, நின்றது. அதிலிருந்து பாகன் கீழே இறங்கி வந்து அடிபட்டுக் கிடந்த சீடனைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டான். அவனிடம் குறைபட்டுக்கொண்டான் சீடன்: ‘என் குருநாதர் சொன்னபடி நான் இந்த யானையில் இறைவனைக் கண்டு ஆராதித்தேன். அப்படியிருக்க இந்த இறைவனே என்னைத் தூக்கி எறியலாமா?’அதற்கு அந்த யானைப்பாகன் சொன்னான்: ‘யானையில் நீங்கள் கடவுளைக் கண்டது உண்மைதான். ஆனால், அதேசமயம், யானை மீதிருந்து  விலகிப் போகும்படி நான் கத்திக்கொண்டிருந்தேனே என்னை நீங்கள் கவனிக்கவில்லையா? எல்லாவற்றிலும் இறைவனைக் காணக் கூடிய நீங்கள் என்னில் இறைவனைக் காணாதது உங்களுடைய துரதிருஷ்டமே.’’ஞானியின் பலமே இதுதான். எல்லாவற்றிலும், யாவரிடத்திலும் இறைவனைக் காண முடிந்த அவனால் இறைவனால் உருவாக்கப்பட்ட சூழ்நிலையையும் அறிந்துகொள்ள முடியும்; இறைவனின் உத்தரவையும் புரிந்துகொள்ள முடியும். அதனால் அவனால் இயல்பாக இயங்கமுடியும். தறிகெட்டு வரும் யானையைப் பார்க்கும் அவனால் பாகனின் எச்சரிக்கைக் குரலையும் கேட்கமுடியும். தன் மனப் பக்குவத்தால் தாக்க வரும் யானைக்கு முக்கியத்துவம் கொடுப்பதா அல்லது காக்க விரும்பும் ஆணைக்கு முக்கியத்துவம் கொடுப்பதா என்பதைச் சரியாகப் புரிந்துகொள்வதோடு அதனால் பலனும் பெறுவான்.ப்ரஸாதே ஸர்வது: கானாம் ஹானிரஸ்யோ பஜாயதேப்ரஸன்னசேதஸோ ஹ்யாசு புத்தி: பர்யவதிஷ்டதே (2:65)‘‘மன அமைதி ஏற்பட்டுவிடுமானால் ஒரு மனிதனுடைய எல்லாத் துன்பங்களும் அழிந்துபோகின்றன. ஏனென்றால் மனம் அமைதியடைந்துவிட்டால், அவனுடைய அறிவும் ஒருமுகமாகிவிடுவதால்தான்.’’பலர், ‘உலகம் ரொம்பவும் கெட்டுவிட்டது’ என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். ‘நல்லதும், கெட்டதும் நிறைந்ததுதான் உலகம்,’ என்றும் சிலர் சொல்வார்கள். இந்தக் கேடுகள் முற்றிலுமாக நீங்கினால் உலகில் அமைதி தவழும் என்று நடைபெறவே முடியாத சாத்தியக் கூற்றினை சிலர் சொல்வார்கள். ஆனால், உலகில் தீயன நிலவுவதும், மனிதர் மனதில் சாந்தி நிலவாததும்தான் யதார்த்தம். மஞ்சள் காமாலைக் கண்ணனுக்குக் காண்பதெல்லாம் மஞ்சள் நிறம்தான் என்பதுபோல தம் மனக்கேடுதான் உலகக் கேடாகப் பலருக்கும் தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம், தனக்கு நிகழ்ந்திருக்கும் கேடு எல்லோருக்கும் நிகழ வேண்டும் என்ற கெடுமதிதான். அடுத்தவன் வசதியுடன் சந்தோஷமாக வாழ்வதைக் காணப் பொறுக்காத இழி மனம்தான். தன் நிலையை அவனுடையதைப் போலவோ அல்லது அதற்கும் மேலாகவோ உயர்த்திக் கொள்ளத் தனக்குத் தகுதியில்லாத அவமானம்தான். உரிய தகுதியின்றி, எந்த முயற்சியும் இன்றி, தன்னை யாராவது உயரத்துக்குத் தூக்கிவிட மாட்டார்களா என்ற சோம்பல் பேராசைதான். உழைக்காமல் எல்லா சௌகரியங்களையும் அனுபவித்துவிட வேண்டும் என்ற உன்மத்த மனநிலைதான். இப்படியெல்லாம் அல்லாடாமல் மனம் அமைதியுற வேண்டுமானால் அது மனித வாழ்வில் சாத்தியமா? சாத்தியமில்லைதான். ஆனால் ஒரு ஞானியின் வாழ்வில் அது சாத்தியம். அவனுக்கு பிறர் வளர்ச்சியில் பொறாமை இல்லை; தான் அந்த அளவுக்கு உயரவில்லையே என்ற ஏக்கம் இல்லை. தனக்கென்றிருப்பது தன்னை வந்து சேராமல் இருக்காது; அதேபோல தனக்கென்று இல்லாதது தான் எவ்வளவுதான் முயற்சித்தாலும் தன்னை வந்து அடையாது என்ற பேருண்மையைப் புரிந்து வைத்திருப்பவன் அவன். ஆகவே தன் கர்மாக்களை ஒழுங்காக, சீராக நிறைவேற்றிக் கொண்டு வந்தாலேயே தன் மனம் ஒருமுகப்பட்டுவிடும் என்பது அவனுக்குத் தெரியும். ஒரு செயலைச் செய்யும்போது ‘செய்யாதே’ என்று உள்ளிருந்து ஒரு குரல் கேட்டால் நாம் தயங்குகிறோம். அதையும் மீறி செய்தால் எதிர்பார்க்கும் பலன் கிட்டாமல் போய்விடுமோ என்ற சந்தேகம் எழுகிறது. செய்யாமல் விட்டுவிட்டால் அந்த வாய்ப்பை இழந்துவிடுவோமோ, அடுத்து எப்போது இதுபோன்ற வாய்ப்பு வருமோ என்று நஷ்டத்தை எண்ணி கலக்கம் அடைகிறோம். ஆனால், உள்ளிருந்து எந்தக் குரலும் கேட்காத வகையில், அதாவது மாற்றுக் கருத்துக்கு இடமளிக்காத வகையில், அந்தச் செயலைச் செய்யத் திட்டமிடும் ஆற்றலை வளர்த்துக்கொள்பவன்தான் ஞானி. அதாவது ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் அதுதான் இறுதியானது என்ற தீர்மானம், உறுதியான மனதில்தான் தோன்றும். இப்படிப்பட்ட மனது ஒற்றையா, இரட்டையா என்று குழம்பாது. எதிரே தோன்றும் பல வழிகளில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று திகைக்காது. எந்த வழி நம் இலக்கை எட்டுமோ என்று தயங்காது. ஒரு வழியைத் தேர்ந்தெடுத்துவிட்டு அதிலேயே பயணம் செய்வதாகத் தீர்மானித்துக் கொண்டு விட்டால், அந்த முடிவில் மாற்றமில்லை. இந்த மன பலம், அந்த வழியில் ஏற்படக்கூடிய இடர்களை எளிதாகக் களைந்து முன்னேறும் சக்தியைத் தரும். நான் நடக்கவில்லை, என்னை அந்தப் பரந்தாமன் வழி நடத்துகிறான் என்ற நம்பிக்கை, தான் மேற்கொண்ட குறிக்கோளில் வெற்றியை ஈட்டித் தரும். இப்படி மனதில் அமைதியை நிரப்பிக் கொண்டால், வேறு எந்த தூசும் உள்ளே நுழைய முடியாது. இதனால் அறிவும் கூர்மையாகிறது. ஆற்றல் மிக்கதாகத் திகழ்கிறது. நாஸ்தி புத்திரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பாவனாந சாபாவயத: சாந்திரசாந்தஸ்ய குத: ஸுகம் (2:66)‘‘மனத்தை அடக்கத் தெரியாதவனுக்கு புத்தி சரியாக வேலை செய்யாது. அது அங்குமிங்கும் அல்லாடிக்கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட அஞ்ஞானிக்கு ஆத்மபாவனையும் இருக்காது. இப்படி ஆத்ம தியானம் இல்லாதுபோனால் அவனுக்கு சாந்திதான் கிட்டுமா? அப்படி சாந்தி கிட்டாதுபோனால் அவனுக்கு இன்பம்தான் ஏது?’’கிருஷ்ணன் தன் கருத்தை வெவ்வேறு வார்த்தைகளில் திரும்பத் திரும்பச் சொல்கிறார். ‘சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கிறாயே!’ என்று அர்ஜுனனும் கேட்கவில்லை. அப்படிக் கேட்கக் கூடியவனானால் அவனுக்கு ஆரம்பத்திலேயே ஞானம் பிறந்திருக்கும். ஆனால், இன்னும்கூட அவனால் குழப்பத்திலிருந்து மீளமுடியவில்லை என்பதால்தான் கிருஷ்ணன் மீண்டும் மீண்டும் சொல்வதை எந்த எதிர்ப்பும் காட்டாமல், எரிச்சலடையாமல் கேட்டுக்கொண்டிருக்கிறான்! (கீதை இசைக்கும்)பிரபு சங்கர்…

You may also like

Leave a Comment

two × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi