எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பெண் இன்ஜினியர் பலி

தாம்பரம், மே 30: பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பெண் இன்ஜினியர் பரிதாபமாக பலியானார்.ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் தாரணி சத்யா (26). இவர், பெருங்களத்தூர் பகுதியில் பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி, அதே பகுதியில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில், சத்யா நேற்று அதிகாலை வேலைக்கு செல்வதற்காக, அறையில் இருந்து புறப்பட்டு தான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே காதில் ஹெட்செட் அணிந்தபடி தண்டவாளத்தை கடந்தபோது அந்த வழியாக வந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட தாரணி சத்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாம்பரம் ரயில்வே காவல் நிலைய போலீசார், உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பெருங்களத்தூர், வண்டலூர், இரும்புலியூர் பகுதிகளில் தொடர்ந்து இதுபோல கவனக்குறைவாக சிலர் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும்போது, ரயில் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே, இதுபோன்ற விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு