ஊர்ந்து சென்று முதல்வர் ஆவதற்கு நான் என்ன பாம்பா? பல்லியா?.. முதல்வர் எடப்பாடி விளக்கம்

புவனகிரி: ‘ஊர்ந்து சென்று முதல்வர் ஆவதற்கு நான் என்ன பாம்பா? பல்லியா?’ என தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். கடலூர் மாவட்டம் புவனகிரி, குறிஞ்சிப்பாடி, கடலூர், பண்ருட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள், நெய்வேலி, விருத்தாச்சலம், தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். புவனகிரி அதிமுக வேட்பாளர் அருண்மொழித்தேவனை ஆதரித்து புவனகிரி பாலம் அருகில் நடந்த கூட்டத்தில் வேனில் இருந்தபடியே எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- காவிரி பிரச்னையில் நல்ல தீர்ப்பை பெற்றுத் தந்தது அதிமுக அரசுதான். அந்த தீர்ப்பை அரசிதழில் இடம்பெறச் செய்தது ஜெயலலிதாதான். விஞ்ஞான உலகத்தில் மக்கள் எல்லோரையும் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். பல இடங்களில் நான் ஊர்ந்து சென்று முதலமைச்சரானேன் என ஸ்டாலின் கூறுகிறார். நான் என்ன பாம்பா? பல்லியா? ஊர்ந்து செல்வதற்கு. நானும் மனுஷன்தான். என் தாத்தா காலம் தொட்டு நான் விவசாயம் செய்து வருகிறேன். அதனால் நான் விவசாயி என்று கூறிக் கொள்கிறேன். நான் கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்கு வந்துள்ளேன். ஜெயலலிதா ஆட்சியில் பல திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு திட்டம் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் தரப்பட்டுள்ளது. அறுவடையான பயிர்கள் மழையால் நாசமானபோது அதற்கும் நிவாரணம் தந்தது இந்த அரசுதான். குடிமராமத்து திட்டத்தை பயன்படுத்தி குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டு அதிலிருந்த வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துச் சென்று நிலத்திற்கு பயன்படுத்துகின்றனர். கடல்நீர் உட்புகாமல் தடுக்க ரெகுலேட்டர் அமைப்பது, தடுப்பணைகள் அமைப்பது, வேண்டிய இடங்களில் உயர்மட்ட பாலம் அமைப்பது எல்லாமே இந்த ஆட்சிதான். தமிழகத்தில் சாலைகள் பற்றி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் பேசும் அளவிற்கு தமிழகத்தின் வளர்ச்சி உள்ளது.இதுதவிர, தாலிக்கு தங்கம் திட்டம், காப்பீட்டுத் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் நல்ல முறையில் நடந்து வருகிறது. வருடத்திற்கு 6 சிலிண்டர், இலவச வாஷிங் மெஷின், வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள், மீனவர்களுக்கு நிவாரண நிதி உயர்வு, 100 நாள் வேலை 150 நாளாக மாற்றியது போன்ற எண்ணற்ற பல திட்டங்களை மீண்டும் ஆட்சிக்கு வந்து செயல்படுத்த உள்ளோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்….

Related posts

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக ஆலோசனை !!

அங்கீகாரம் கொடுத்த பிரதமர் மோடியின் முதுகில் குத்திய துரோகி எடப்பாடி பழனிசாமி: அண்ணாமலை கடும் விமர்சனம்