Saturday, July 6, 2024
Home » ஊரை அடித்து உலையில் போட்ட அமைச்சர்களை சிறைக்கு அனுப்பும் தேர்தல்: விருதுநகரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

ஊரை அடித்து உலையில் போட்ட அமைச்சர்களை சிறைக்கு அனுப்பும் தேர்தல்: விருதுநகரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

by kannappan

விருதுநகர்: ஊருக்கு உழைக்கும் திமுகவினரை கோட்டைக்கும், ஊரை அடித்து உலையில் போட்ட அதிமுக அமைச்சர்களை சிறைக்கும் அனுப்பும் தேர்தல்தான் இது என, விருதுநகரில் நடந்த பிரசார கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் தமிழகத்தில் இரண்டாம்கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் பட்டம்புதூரில் நேற்று மாலை நடைபெற்றது. பிரசாரத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பெட்டியில் இருந்த மனுக்களை எடுத்து படித்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அதிமுக அரசு கடைசி கொள்ளையில் இறங்கிவிட்டது. ஆட்சி முடிய 3 மாதங்கள் இருக்கும் நிலையில், மக்களுக்கு ஏதாவது நல்லது செய்துவிட்டு போவோம் என நினைக்காமல், கடைசி நேரத்தில் கிடைப்பதை சுருட்டிக் கொண்டு ஓடுவோம் என பழனிசாமி கும்பல் அலைகிறது. சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வரும் முன்பாக வசூல்வேட்டை நடத்தி குவிக்க பழனிசாமி துடிக்கிறார். தனது பொறுப்பில் உள்ள பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறையை சூறையாடி கொண்டிருக்கிறார். கடந்த 3 மாதங்களில் 2,855 கோடிக்கு டெண்டர் விட்டுள்ளார். அரசு பணத்தை அவசர, அவசரமாக சுருட்ட டெண்டர் விட்டிருக்கிறார். கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் டெண்டர் கொள்ளைதான் நடக்கிறது. பொதுமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்டபோது மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டங்களை அறிவிக்க தயங்கிய முதலமைச்சர், இப்போது கமிஷனுக்காக புதிய திட்டங்களை அறிவித்துக் கொண்டு இருக்கிறார். 5 லட்சம் கோடி கடனில் தமிழ்நாடு இருக்கிறது. கடன் வாங்கி கொள்ளையடிக்கிற வேலை அதிமுக ஆட்சியில் நடக்கிறது. ஒரு மாதத்திற்குள் எப்படியாவது கஜானாவை சுரண்டி காலி செய்ய திட்டமிட்டு முதலமைச்சரும், அமைச்சர்களும் டெண்டர் விட்டு கொள்ளையடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் விட்டுள்ள சட்ட விரோத டெண்டர்களை விசாரிக்க தொமுச சார்பில் ஊழல் தடுப்பு பிரிவில் புகார் தந்திருக்கிறார்கள். இது மக்களுக்கான ஆட்சியில்லை, டெண்டர்களுக்கான ஆட்சி என்பதை மக்கள் உணர வேண்டும். திமுக ஆட்சி அமைந்ததும் கடைசி நேரத்தில் விடப்பட்ட அனைத்து டெண்டர்களும் ஆய்வு செய்யப்படும். கமிஷனுக்காக விடப்பட்ட டெண்டர்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு எப்படி வரும் என தெரியாது. மக்கள் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பது நன்றாக தெரியும். ஊருக்கு உழைக்கும் திமுகவினரை கோட்டைக்கும், ஊரை அடித்து உலையில் போட்ட அதிமுக அமைச்சர்களை சிறைக்கும் அனுப்பும் தேர்தல்தான் இது. கலைஞரின் கடைசி ஆசை அண்ணா பக்கத்தில் ஓய்வு எடுக்கவேண்டும் என்பது. ஆனால் அவர் மறைந்தபோது இடம் கொடுக்க மறுத்தார்கள். நீதிமன்றம் சென்றோம். கேட்ட இடத்தில் இடம் கொடுங்கள் என நீதிமன்றம் சொன்னது. தீர்ப்பு சாதகமாக இல்லையென்றால் மீறி போவோம் என நினைத்தேன். நீதிமன்றம் நியாயமான தீர்ப்பு வழங்கியது. கலைஞருக்கு 6 அடி இடம் கொடுக்க தவறிய பழனிசாமிக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கலாமா என முடிவு செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.’இதுவரை இல்லாத தலைக்குனிவு’பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘இங்குள்ள அமைச்சரின் பெயரை சொல்லும் அளவிற்கு தகுதி வாய்ந்தவர் அல்ல. பபூன், பலூன். நாட்டில் 1920ல் இருந்து தேர்தல் நடக்கிறது. 100 ஆண்டுகளாக எத்தனையோ தேர்தல் நடந்திருக்கிறது. இந்த தேர்தல்களில் வென்றவர்களிலேயே மிகவும் மோசமான அடி முட்டாள் அவர்தான். இதுபோன்ற தலைகுனிவு இதுவரை தமிழகத்திற்கு வரவில்லை. வரவும் கூடாது. வாய்க்கு வந்ததை பேசுகிறார். என்னை ஒருமையில் பேசுகிறார். அசிங்கமாக பேசுகிறார். அதைப்பற்றி கவலைப்படவில்லை. தகுதியானவர் பேசினால் அதை பற்றி கவலைப்பட்டு மதித்து பதில் சொல்ல வேண்டும். தரம்கெட்டவர்களுக்கு, கேடுகெட்டவர்களுக்கு பதில் சொல்வது அவமானம். ஒரு ஞானியை ஒருவர் அசிங்கமாக விமர்சித்தபோது ஞானி பதில் செல்லவில்லை. ஏன் பதில் சொல்லவில்லை என கேட்டபோது, ஞானி கூறுகிறார். ஒரு பொருளை நீங்கள் தரும்போது நான் வாங்க மறுத்தால் அது உங்களுக்கே சொந்தமாகிவிடும். அதைப்போல் அவர் செய்கிற விமர்சனங்களை நான் வாங்கிக் கொள்ளவில்லை. அது அவருக்கே சொந்தமாகி விடும். அண்ணா ஒரு கதை சொல்வார், ஒரு கோயில் யானையை பாகன் சுத்தப்படுத்தி அழைத்து வரும்போது சக்கடையில் புரண்ட பன்றி எதிரில் வந்ததாம். பன்றியை பார்த்து யானை ஒதுங்கி போனதாம். பன்றி நினைத்ததாம் யானை நம்மை பார்த்து பயந்து போகிறது என்று. ஆனால் சாக்கடை நம் மீது பட்டுவிடக்கூடாது என யானை போகிறது என்பது பன்றிக்கு தெரியவில்லை’’ என்றார்.”விவசாயிகளின் உணர்வை பிரதிபலிக்கிறது ‘தினகரன்’ தலையங்கம்”‘தினகரன்’ நாளிதழில் நேற்று விவசாய கடன் ரத்தால் ‘யாருக்கு பயன்’ என்ற தலைப்பில் தலையங்கம் வெளியாகி இருந்தது. சங்கரன்கோவிலில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் நேற்று காலை பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த தலையங்கத்தை சுட்டிக்காட்டி பேசினார். இந்த தலையங்கம் விவசாயிகளின் உணர்வை பிரதிபலிக்கிறது எனக் கூறியதுடன் தலையங்கத்தை முழுவதும் மேடையிலேயே படித்து காட்டினார். அரசானது ஒரு அறிவிப்பை வெளியிடும்போது, அதனால் யார், யார் பலனடைகின்றனர். திட்டம் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களை போய் சேர்கிறதா என்பதை ஆராய வேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டு காட்டியிருக்கிறாகள். இதுதான் உண்மை என்று தினகரன் தலையங்கத்தை பாராட்டினார்.’பயிர்க்கடன் ரத்து வெற்று அறிவிப்பு’தென்காசி மாவட்டம், தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 5 தொகுதிகளுக்கான தென்காசி தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நேற்று காலை சங்கரன்கோவில் அண்ணா திடலில் நடந்தது. இதில் பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுைகயில், விவசாயிகள் கடன் ரத்து, வெறும் அறிவிப்பு தான், முதல்வர் பழனிசாமி கடைசி நேர நாடகங்களை நடத்தி விவசாயிகளை ஏமாற்றி வருகிறார் என குற்றம் சாட்டினார்….

You may also like

Leave a Comment

one × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi