ஊராட்சி மன்ற தலைவர் வீட்டை முற்றுகையிட்ட கிராம மக்கள்

திட்டக்குடி, ஆக. 1: கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள சாத்தநத்தம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை எனவும், கிராமப்புறங்களில் உள்ள தெருக்களில் கழிவுநீர் வாய்க்கால்கள் முறையாக இல்லாததால் கழிவுநீர் சாலையில் செல்வதாகவும், மேலும் அப்பகுதியில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதாகவும், இது சம்பந்தமாக பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடமும், ஊராட்சி மன்ற தலைவரிடமும் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், அப்பகுதி பொதுமக்கள் திடீரென காலி குடங்களுடன் ஆவினங்குடி-நாவலூர் சாலையில் வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஆகியும் எந்த அதிகாரியும் வராததால், திடீரென ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ஆவினங்குடி போலீசார் மற்றும் நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள், குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் ஆழ்துளை கிணறு அமைத்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தனர். அதிகாரிகளின் வாக்குறுதியை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஊராட்சி மன்ற தலைவர் வீட்டை கிராம மக்கள் முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி