ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் அரியலூர் மாவட்டம் வாலாஜா நகரத்தில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா துவக்கி வைத்தார்

அரியலூர், ஜூலை 3: அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் ஊராட்சி, அங்கன்வாடி மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் 2024 மற்றும் வைட்டமின் – A திரவம் வழங்கும் முகாமினை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, அரியலூர் மாவட்டத்தில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலும் (புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) நடைபெற உள்ளது. இதேபோன்று வைட்டமின் A திரவம் வழங்கும் முகாம் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரை (புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) நடைபெற உள்ளது. அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் இம்முகாம் நடைபெற உள்ளது.
தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாமில் அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 02 ஓஆர்எஸ் (ORS) பொட்டலங்கள் மற்றும் 14 துத்துநாக மாத்திரைகள் (Zinc) மாத்திரைகள் வீடு வீடாக சென்று அங்கன்வாடி பணியாளர்களால் விநியோகம் செய்யப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம புறங்களில் வசிக்கும் 52985 குழந்தைகள் மற்றும் நகர்புறங்களில் வசிக்கும் 5492 குழந்தைகள் என மொத்தம் 58477 குழந்தைகளுக்கு ஓஆர்எஸ் (ORS) பொட்டலங்கள் மற்றும் 14 துத்துநாக மாத்திரைகள் (Zinc) விநியோகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் போது நீர்ச்சத்து குறைபாடைத் தடுப்பதற்கு ORS கரைசலை வழங்க வேண்டும். தீவிர தடுப்பு முகாமின் நோக்கம் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்புகளை முற்றிலும் தடுப்பதாகும்.

இதேபோன்று வைட்டமின் A திரவம் வழங்கும் முகாமில் 6 மாதம் முதல் 60 மாதம் வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படுகிறது. 6 மாதம் முதல் 11 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மி.லி. அளவிலும், 12 மாதம் முதல் 60 மாதம் வரை குழந்தைகளுக்கு 2 மி.லி என்ற அளவிலும் வழங்கப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமம் மற்றும் நகர்புறங்களில் வசிக்கும் 27011 ஆண் குழந்தைகள் மற்றும் 25526 பெண் குழந்தைகள் என மொத்தம் 52537 குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது.
வைட்டமின் A திரவம் வழங்குவதன் மூலம் வைட்டமின் A குறைபாட்டினால் ஏற்படும் பார்வை குறைபாடு, வயிற்றுப்போக்கு போன்றவற்றை தடுப்பதன் மூலம் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தை மரணத்தை குறைக்க முடியும். எனவே அனைத்து பொது மக்களும் இம்முகாம்களை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தெரிவித்தார்.

இந்நிகழ்வில், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அஜித்தா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் அன்பரசி, அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, வாலாஜாநகரம் ஊராட்சி மன்றத் தலைவர் அபிநயா இளையராஜா, செவிலியர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு