ஊத்துக்கோட்டை முதல் ஏ.என்.குப்பம் வரை ₹23 கோடி மதிப்பில் ஆரணியாற்றின் கரைகள் சீரமைப்பு பணி தீவிரம்

ஊத்துக்கோட்டை, ஜூன் 7: ஊத்துக்கோட்டை முதல் ஏ.என். குப்பம் வரை ஆரணியாற்றின் கரைகளை சீரமைக்க ₹23 கோடி ஒதுக்கப்பட்டு கரைகளில் கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் மற்றும் ஆற்றின் கரைகள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள பிச்சாட்டூர் ஏரியில் இருந்து இரவோடு இரவாக வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆற்றின் கரைகள் சேதமடைந்தது. ஆற்றின் கரைகளை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி தமிழக அரசு ஆரணியாற்றின் கரைகளை சீரமைக்க ₹23 கோடி நிதி ஒதுக்கியது. அதன்படி ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம், பாளேஸ்வரம், பெரியபாளையம், ஆரணி, பெருவாயல், ஏ.என்.குப்பம் ஆகிய பகுதிகளில் கரைகளை சீரமைக்கும் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. இதனை தொடர்ந்து தற்போது பெரியபாளையம் ஆரணியாற்றின் பகுதியில் கரைகளில் கற்கள் பதிக்கும் பணிகளில் நீர்வளத்துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்