ஊத்துக்கோட்டை பகுதியில் ஆறுவழிச்சாலை பணிக்காக ஆரணியாற்றிலிருந்து மணல் திருட்டு : விவசாயிகள் குற்றச்சாட்டு

ஊத்துக்கோட்டை, பிப்.9: திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 116 கி.மீ தூரத்திற்கு ₹3,200 கோடி செலவில் 6 வழிச்சாலை அமைக்க ஒன்றிய அரசு நிதி ஒதுக்க, தமிழக அரசும், ஆந்திர அரசும் இணைந்து தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற முடிவு செய்துள்ளது. இதற்காக ஊத்துக்கோட்டை வட்டத்தில் மட்டும் 6 வழிச்சாலைக்காக 21 கிராமங்களில் 276 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகள் ஆறுவழிச்சாலை அமைக்க கூடாது என ஆர்ப்பாட்டம், கருப்பு கொடி போராட்டம், சைக்கிள் பேரணி என பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அரசுக்கு சொந்தமான இடங்களான கன்னிகைப்பேர், வடமதுரை, பனப்பாக்கம், செங்காத்தாகுளம் மற்றும் ஒரு சில தனியார் நிலங்களில் மட்டும் ஆறுவழிச்சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று பெரியபாளையம் அருகே கீழ்மாளிகைப்பட்டு மற்றும் தும்பாக்கம் சுடுகாடு பகுதியில் ஆரணியாற்றின் குறுக்கே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மிக்ஜாம் புயலின் காரணமாக ஆணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தற்போது படிப்படியாக தண்ணீர் குறைந்து விட்டதால் மீண்டும் ஆறுவழிச்சாலைக்கான மேம்பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக கீழ்மாளிகைப்பட்டு, தும்பாக்கம் இடையே ஆரணியாற்றில் சட்ட விரோதமாக பொக்லைன் இயந்திரம் மூலம் லாரிகளில் மணல் அள்ளி பயன்படுத்துகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்ட விரோதமாக மணல் அள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: ஆறுவழிச்சாலை பணிக்காக ஆரணியாற்றில் மணல் எடுக்கிறார்கள். இதனால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுகிறது. விவசாயிகள் விவசாயம் செய்ய தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகிறோம். வருவது கோடை காலம் என்பதால் நிலத்தடிநீர் வேகமாக குறையும். மேலும் மணல் எடுப்பது குறித்து வருவாய்துறை, பொதுப்பணித்துறை, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனே நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரிய அளவில் விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவோம் என கூறினர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி