ஊட்டி படகு இல்ல வளாகத்தில் ரூ.4 கோடியில் முதன்முறையாக சாகச விளையாட்டுகள் அமைப்பதற்கான பணிகள் துவக்கம்-சுற்றுலாத்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

ஊட்டி : நீலகிரி மாவட்டம் ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் முதன்முறையாக பல வகையான சாகச விளையாட்டுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா  ஊட்டி படகு இல்ல வளாகத்தில் நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தனர். வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்று அடிக்கல் நாட்டினார். பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் கூறியதாவது:  நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலமாக விளங்குவதால் உள்மாநிலம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து பல்வேறு சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருகை புரிகின்றனர். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் ஊட்டி படகு இல்லத்திற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு இன்றைய தினம் ஊட்டி படகு இல்லத்தில் சாகச சுற்றுலா விளையாட்டுகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.தமிழ்நாடு சுற்றுலாத்துறை சாகச விளையாட்டுகளுக்கு விதிமுறைகளை கண்டறிந்து கடந்த செப்டம்பர் மாதம் நெறிமுறைப்படுத்தி விதிமுறைகளை வெளியிட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் சுற்றுலா தல மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டத்தினை வெளியிட்டார்.  சில இடங்களில் தனியாருடன் இணைந்து பல்வேறு சாகச விளையாட்டுகள் செய்ய திட்டமிடப்பட்டது. இதில் ஊட்டி படகு இல்லம், கொல்லிமலை, ஜவ்வாதுமலை, ஏலகிரி ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சாகச விளையாட்டுகள் தனியாருடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. சுற்றுலாத்துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பில் கிளேம்பிங் சைட் நிறுவப்படவுள்ளது. வெளி நாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்ற காரணத்தினால் வருவாய் ஈட்டும் விதமாக சாகச சுற்றுலா தனியாருடன் இணைந்து அமைக்கப்படவுள்ளது. இதில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல வகையான சாகச விளையாட்டுகளான ஜிப் லைன், ஜிப் சைக்கிள், ஜெயன்ட் ஸ்விங், ரோலர் கோஸ்டர், பங்கி ஜம்பிங், தொங்கு பாலம், 4 இருக்கைகள் கொண்ட ஹியுமன் கெய்ரோ ஆகிய சாகச விளையாட்டுகள் இடம் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது. இதற்காக சுமார் ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை செலவாகும். இப்பணிகள் முடிவடைய 6 முதல் 7 மாதங்கள் வரை ஆகும். ஏற்கனவே இது போன்ற சாகச நிகழ்ச்சிகள் செய்து கொண்டிருப்பவர்கள் பதிவு செய்து இது மட்டுமின்றி வேறு நிகழ்ச்சிகள் செய்பவர்களுக்கு வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. தன்னார்வலர்கள் இதுபோன்று நிகழ்ச்சிகளை மேற்கொள்ள சுற்றுலாத்துறையில் பதிவு செய்யும் பொழுது அவர்களுக்கு தேவையான அனுமதி வழங்கப்படும். இந்நிகழ்ச்சிகளை செயல்படுத்துபவர்களும் தரமானதாகவும், பாதுகாப்புடனும் செயல்படுத்துவார்கள். இதன் மூலம் சுற்றுலா பயணிகளுக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. தமிழக முதல்வர் முயற்சியினால் சுற்றுலாத்துறையின் மூலம் மிதக்கும் உணவகம் அதிகளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்த்துள்ளது. இதுபோன்று பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படும், என்றார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித்தலைவர் பொன்தோஸ், ஊட்டி ஆர்டிஓ துரைசாமி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெங்கடாச்சலம், மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்….

Related posts

திண்டுக்கல்லில் மாநகராட்சி இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்..!!

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 99% கூடுதலாக பதிவு..!!

பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 146 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்