ஊட்டி – கூடலூர் சாலை காமராஜர் சாகர் அணை அருகே சாய்ந்த கற்பூர மரங்கள்-போக்குவரத்து கடும் பாதிப்பு

ஊட்டி :  ஊட்டி  – கூடலூர் சாலையில் காமராஜர் சாகர் அணை அருகே அடுத்தடுத்து விழுந்த இரு  கற்பூர மரங்களை தீயணைப்புத்துறையினர் வெட்டி அகற்றினர். நீலகிரி  மாவட்டத்தில் இந்த மாத துவக்கத்தில் இருந்து அவ்வப்போது மழை பெய்தது.ஆனால் தொடர்ச்சியாக மழை பெய்யவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம்  அதிகாலை முதல் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு காற்றுடன் கூடிய சாரல் மழை  மாவட்டம் முழுவதும் பரவாக பெய்தது. இதன் காரணமாக கடும் குளிர் நிலவியது.  குறிப்பாக ஊட்டி நகரில் காலை துவங்கிய சாரல் மழை தொடர்ச்சியாக பெய்த  நிலையில் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில்  பலத்த காற்று காரணமாக நேற்று காலை 7 மணியளவில் ஊட்டி – கூடலூர் சாலையில்  காமராஜர் சாகர் அணை  அருகே அடுத்தடுத்து இரண்டு ராட்சத கற்பூர மரங்கள் சாலையின்  குறுக்காக விழுந்தது. இதனால்  போக்குவரத்து பாதித்து  சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்தன. இதனை தொடர்ந்து உடனடியாக  தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ஊட்டி  தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள்  சாமுவேல் பெஞ்சமின், வீரர் இர்பான், மணிகண்டன், எட்வா்டு கால்வின்  உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் விரைந்தனர். சாலையின் குறுக்காக  விழுந்த மரங்களை  இயந்திரம் மூலம் வெட்டி அகற்றினர். இதனை தொடர்ந்து  சுமார் 1 மணி நேரத்திற்கு பின் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து சீரானது.   நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி நீலகிாியில் பெய்த மழையளவு  மி.மீ.,யில்: ஊட்டி 5.2, நடுவட்டம் 4, கல்லட்டி 1.2, குந்தா 10, அவலாஞ்சி  11, அப்பர்பவானி 11, கேத்தி 11, குன்னூர் 4, தேவாலா 14, பந்தலூர் 25 என  மொத்தம் 164 மி.மீ., மழை பதிவாகியது….

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு