ஊட்டி அருகே சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்துவதால் நெரிசல்

 

ஊட்டி, ஆக.19: ஊட்டியில் உள்ள ஏடிசி முதல் என்டிசி பகுதி வரையில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஊட்டி நகரின் முக்கிய சாலைகளில் ஒன்று எட்டினஸ் சாலை. மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஏராளமான அரசு பஸ்கள் இவ்வழித்தடத்தில் ஏடிசி வழியாக இயக்கப்படுகிறது. அதேபோல், வெளியூர் மற்றும் கிராமப்புறங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இவ்வழித்தடத்திலேயே செல்ல வேண்டும். மேலும், பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலை மிகவும் குறுகியே உள்ள போதிலும் இந்த சாலையோரங்களில் சிலர் தங்களது வாகனங்களை காலை முதல் மாலை வரை நிறுத்திக் கொள்கின்றனர். சில சமயங்களில் லாரிகளையும் நிறுத்திக் கொள்கின்றனர். சிலர் பொருட்களை வாங்க கடைகளின் முன்புறம் நிறுத்தி செல்கின்றனர். அப்போது இந்த வாகனங்களை வாகன ஓட்டிகள் கடந்து செல்ல முற்படும் போது, எதிரே வரும் வாகனங்கள் மீது மோதியோ அல்லது உரசியோ விபத்துகள் ஏற்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நின்று விடுகின்றன.

குறிப்பாக, தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறையின் போது அதிகளவு சுற்றுலா பயணிகள் ஊட்டி வரும் நிலையில் இச்சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கின்றனர். எனவே, இந்த சாலையில் வாகனங்களை நிறுத்தமால் இருக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாலையோரத்தில் உள்ள கால்வாயை சீரமைத்து அதன் மீது கான்கிரீட் தளம் அமைத்து சாலையை விரிவாக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்