ஊட்டி அருகே கடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தி புலி நடமாட்டம் கண்காணிப்பு

ஊட்டி : ஊட்டி அருகே கடநாடு பகுதியில் 15 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி புலி நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள கடநாடு கிராமத்தில் கடந்த சில நாட்களாக வனத்தை ஒட்டியுள்ள பகுதியில் புலி நடமாட்டம் இருந்து வருகிறது. பட்டப்பகலில் புலி நடமாடியதை அக்கிராமத்தை சேர்ந்த சிலர் பார்த்ததுடன், வீடியோவும் எடுத்துள்ளனர். புலி நடமாட்டம் தொடர்பான தகவலை அடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் இடம் பெயர்ந்து வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.இந்நிலையில், நீலகிரி கோட்ட மாவட்ட வன அலுவலர் போஸ்லே சச்சின் துக்காராம் கடநாடு, காவிலோரை கிராம பகுதிகளில் புலி நடமாட்டம் குறித்து ஆய்வு செய்து அந்த பகுதி மக்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து புலி நடமாட்டத்தை கண்காணிக்கும் பொருட்டு கடநாடு மற்றும் காவிலோரை பகுதிகளில் 15 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரங்களில் அவசியமின்றி வெளியில் நடமாட வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது. இது குறித்து மாவட்ட வன அலுவலர் போஸ்லே சச்சின் துக்காராம் கூறுகையில்,“காவிலோரை, கடநாடு பகுதியில் ஒரு வாரமாக புலி நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து அதனை கண்காணிக்க 15 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கேமராவில் பதிவாகும் படத்தை கொண்டு புலியின் வயது, எங்கிருந்து வந்துள்ளது என்பது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மாலை நேரங்களில் பொதுமக்கள் தனியாக நடமாடுவதை தவிர்க்க வேண்டும். புலி நடமாட்டத்தை பார்த்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்’’ என்றார்….

Related posts

கட்டுமான தொழில் கடுமையாக பாதிப்பு; ஆந்திராவில் இருந்து மணல் எடுத்து வர அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடிதம்

உமா குமரன் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

உதகை குதிரை பந்தய மைதானம் மீட்கப்பட்ட நடவடிக்கையில் தலையிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்