ஊட்டியில் சுற்றி திரிந்த 35 தெருநாய்கள் சிக்கின

 

ஊட்டி, ஆக. 4: ஊட்டி நகராட்சி சார்பில் கடந்த இரு நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரிந்த 35 தெருநாய்கள் பிடிக்கப்பட்டன. ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பல இடங்களிலும் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிந்து வந்தன. இவை அவ்வப்போது பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் போன்றவற்றை விரட்டுகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வந்தனர். மேலும் நகரில் தெருநாய்களின் நடமாட்டத்தை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சியை வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் நகராட்சி ஆணையர் ஏகராஜ் உத்தரவின்பேரில் நகர்நல அலுவலர் ஸ்ரீதர் மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் டாக் டிரஸ்ட் அமைப்புடன் இணைந்து முதல்கட்டமாக கடந்த 26ம் தேதி 16 தெருநாய்கள் பிடிக்கப்பட்டன. இந்நிலையில் 2வது கட்டமாக நேற்று முன்தினம் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட நொண்டிமேடு, ரோஜா பூங்கா பகுதி, எட்டின்ஸ் சாலை பகுதிகளிலும், நேற்று லவ்டேல் சந்திப்பு பகுதி, காந்தல், ஊட்டி ஏரி பகுதி என மொத்தம் 35 தெருநாய்கள் பிடிக்கப்பட்டன.

இவை வாகனத்தில் ஏற்றப்பட்டு இனபெருக்க கட்டுபாட்டு அறுவை சிகிச்சை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டன. இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஊட்டி நகரில் அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திாியும் தெருநாய்களை டாக் டிரஸ்ட் அமைப்பின் உதவியுடன் பிடிக்கப்பட்டன. இதற்காக நகராட்சி மூலம் அந்த டிரஸ்ட்டிற்கு ஒரு நாய்க்கு இவ்வளவு என நிதி வழங்கப்படும். இதனை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட நாய்களுக்கு ஏடிசி எனப்படும் இனபெருக்க கட்டுபாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு விடுவிக்கப்படும்’’ என்றனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்