உவரி அருகே நடந்த விபத்தில் நாகர்கோவிலை சேர்ந்த 2 பேர் பலி

 

நாகர்கோவில், ஜூன் 3: உவரி அருகே காரின் முன்பக்கம் டயர் வெடித்தது காரணமாக பைக்கும், காரும் மோதிக் கொண்டதில் நாகர்கோவிலை சேர்ந்த 2 பேர் பரிதாபமாக இறந்தனர். நாகர்கோவில் வடசேரி அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணபிள்ளை(65), கோணம் அரசு ஐடிஐயில் பயிற்றுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது நண்பர் சேகர்(64) இவர் பிளம்பர் வேலை செய்து வந்தார்.

இருவரும் நேற்று முன்தினம் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுவிட்டு பைக்கில் நாகர்கோவில் நோக்கி வந்துகொண்டு இருந்தனர்.  அவர்கள் உவரி அருகே வரும்போது பொள்ளாச்சியிலிருந்து காரில் சிவபிரகாசம்(49) மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 6 பேர் கன்னியாகுமரி சென்று விட்டு திருச்செந்தூருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது காரின் முன் பக்க டயர் திடீரென வெடித்தது.
இதன் காரணமாக காரும், பைக்கும் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கிருஷ்ணபிள்ளை, சேகர் மற்றும் கார் டிரைவர் மணி(49), காரில் இருந்த சிவபிரகாசம் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். 4 பேரையும் மீட்டு திசையன்விளையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் கிருஷ்ணபிள்ளை, சேகர் ஆகியோர் நேற்று அதிகாலையில் இறந்தனர். அவர்களது உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு, நேற்று மாலை சொந்த ஊரான கிருஷ்ணன்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த விபத்து குறித்து உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு