உழவர் சந்தையில் போராட்டம் நடத்த வந்தவர்களால் பரபரப்பு

சேலம், ஆக.31:சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தையில் போராட்டம் நடத்த வந்தவர்களால் பரபரப்பு நிலவியது. அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உழவர் சந்தைகளில் ஒரு சிலர் தலையிட்டால் விவசாயிகள் கொண்டு வரும் விலை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இது குறித்து விவசாயிகள் பலர் உழவர் சந்தை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் உழவர் சந்தை அதிகாரிகள் இதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சேலம் தாதகாப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் ஒரு சில வியாபாரிகள் வெளியில் இருந்து காய்கறிகளை வாங்கி வந்து வியாபாரம் செய்து வருகின்றனர். இது சம்பந்தமாக வேளாண் (வணிகம்) அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களிடம் சென்று அவர்களுக்கு விவசாய நிலம் உள்ளதா என்று ஆய்வு செய்தனர். அப்போது 6 பேரும் விவசாய நிலம் இல்லாமல் வெளியில் இருந்த காய்கறிகளை வாங்கி வந்து உழவர் சந்தையில் கடைகள் அமைத்து வியாபாரிகள் செய்தது தெரியவந்தது.

சம்பந்தப்பட்ட 6 பேரும் உழவர் சந்தையில் கடைகள் அமைக்க அதிகாரிகள் தடை விதித்தனர். இது சம்பந்தமாக தாதகாப்பட்டி உழவர்சந்தையில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதில் சம்மந்தப்பட்ட ஆறு பேரும் அதிகாரிகளை கண்டித்து நேற்று காலை உழவர்சந்தை முன்பு துண்டுபிரசுரம் விநியோகித்து, ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு அங்கு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் உழவர் சந்தையில் பரபரப்பான சூழல் நிலவியது.

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்