உழவன் செயலியில் முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை

தேன்கனிக்கோட்டை, ஜூன்16: தளி வட்டாரத்தில், இடுபொருட்களை உழவன் செயலியில் முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உழவன் செயலியில் தற்போது 21 வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன. மத்திய, மாநில அரசால் வழங்கப்படும் மானியத்திட்டங்கள், இடுபொருள் முன்பதிவு, பயிர் காப்பீடு விவரம், விவசாயிகள் தாங்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் உரக் கடைகளில் உள்ள உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்களை இந்த செயலியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மேலும் உரங்களின் இருப்பு நிலை, அவற்றின் விலையை சில நிமிடங்களில் அறிந்து கொள்ளலாம். குறைந்த விலையில் வாடகைக்கு இயந்திரங்களை பெறுவது, காய்கறிகளின் சந்தை விலை நிலவரம், களையெடுத்தல், உரமிடுதல், மருந்துகள் தெளித்தல், வேளாண் நிதி நிலை அறிக்கை, அரசால் வழங்கப்படும் அனைத்து பயன்களையும் அறிந்து கொள்ளலாம்.எனவே, விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து பெயர், கைபேசி எண் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். தங்களுக்கு தேவையான இடுபொருட்களை, உழவன் செயலியில் முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு, 100 சதவீத முன்னுரிமை வழங்கப்படுவதால், அனைவரும் தவறாது பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 3 நாளில் 130 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு: துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் பணிகள் விறுவிறுப்பு

மாநகராட்சிப் பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து

பொதுமக்கள் சிறப்பு குறைதீர் முகாம் 8 மாதங்களில் 851 மனுக்கள் மீது தீர்வு