உள்ளாட்சி ேதர்தலில் போட்டியிட இலை கட்சியினர் லகரம் கேட்பதால் மிரண்டு போயிருக்கும் முன்னாள் அமைச்சரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கிரானைட் முறைகேட்டில் உச்சத்தை தொட்ட தூங்கா மாவட்ட அதிகாரி அனுப்பிய பைல் முடக்கப்பட்டதாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘தூங்கா நகர மாவட்டத்தில் கிரானைட் குவாரி முக்கிய தொழிலாக இருந்தது. இலை ஆட்சிக்காலத்தில், சில கிரானைட் குவாரி உரிமையாளர்கள் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயல்பட்டு, ஆட்சியாளர்களை கைக்குள் போட்டு, கிரானைட் வளங்களை சூறையாடினர். இதில் நடந்த பல கோடி முறைகேடு தொடர்பாக பெரும் பூகம்பமே வெடித்து, விசாரணை ஆணையம், கைது, நீதிமன்றம் வரை சென்றது. தற்போது குவாரிகள் மூடப்பட்டுள்ளது. தொழிலாளர் நலன் கருதி, முறைகேட்டில் ஈடுபட்டுள்ள குவாரிகளை தவிர்த்து, மற்ற குவாரிகளுக்கு பல்வேறு விதிகளை வகுத்து, முறையாக கண்காணித்து, அரசே மீண்டும் குவாரியை இயக்க வேண்டும் என கடந்த ஆட்சியின்போது கோரிக்கை வைக்கப்பட்டு, அதற்கான கோப்பு தயார் ஆனது. குவாரிகளை மீண்டும் திறக்கவேண்டும் என மதுரை தாமரை கட்சியினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். வேறு சில தரப்புகள் திறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்… இது தெரியாமல் கரன்சிக்கு ஆசைப்பட்டு சில கிரானைட் உரிமையாளர்களின் கைப்பாவையாக மாறிய, தூங்கா நகர கனிமவளத்துறையின் அதிகாரி மீண்டும் குவாரியை திறப்பது தொடர்பாக கோப்பு தயாரித்து, அதனை மாவட்டத்தின் உச்ச அதிகாரியின் அனுமதிக்காக அனுப்பினாராம். கோப்பை படித்து பார்த்ததும், உச்ச அதிகாரி அதிர்ச்சியடைந்து, கனிமவள அதிகாரியை ஒரு பிடி பிடித்துவிட்டாராம். அதிர்ச்சியடைந்த அந்த அதிகாரி தற்போது, மாவட்ட உச்ச அதிகாரியின் கண்ணில் படாமல், அடிக்கடி விடுமுறை எடுத்து தலைமறைவாகி விடுகிறாராம். கிரானைட் குவாரி திறப்பு தொடர்பான கோப்பு மாவட்ட உச்ச அதிகாரியின் பாதுகாப்பில் பத்திரமாக வைத்துள்ளாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘கடத்தல் புகாரில் எந்த துறை அதிகாரிகள் கிலியில் இருக்காங்க..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கடலோர மாவட்டத்தில் 4 இடங்களில் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கிடங்குகள் உள்ளது. இந்த கிடங்குகளில் இருந்து அரிசி மூட்டைகள் மாவட்டத்தில் உள்ள 357 ரேஷன் கடைகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுமாம். லாரிகளில் அரிசி மூட்டைகள் ஏற்றும்போது கூடுதலாக அரிசி மூட்டைகளை ஏற்றி குறிப்பிட்ட சில ரேஷன் கடைகளில் இறக்கி வைக்கிறாங்களாம். பின்னர் மாதத்தில் ஒரு நாள் அந்த ரேஷன் கடைகளில் இருந்து அரிசி மூட்டைகள் கேரளாவிற்கு கடத்தப்படுகிறதாம். இந்த கடத்தல் சம்பவத்தை கண்டு கொள்ளாமல் இருக்க அதிகாரிகளுக்கு மாதந்தோறும் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் கட்டுகட்டாக கரன்சி சென்று விடுகிறதாம். அதிகாரிகளை தேடி மாதந்தோறும் கரன்சி வந்து விடுவதால் ரேஷன் கடைகளில் நேரடியாக ஆய்வு செய்யலையாம். கடந்த ஆட்சியில் மாதந்தோறும் கரன்சியில் ருசி பார்த்த அதிகாரிகள் ஆட்சி மாறியும் இதே பாணியை தான் பின்பற்றுகிறார்களாம். இது குறித்த புகாரை சில ஊழியர்கள் மேலிடத்துக்கு ஆதாரங்களுடன் அனுப்பி இருக்காங்களாம். இதனால், கரன்சி மழையில் குளித்த அதிகாரிகள் அச்சத்தில் இருக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘காக்கி ஆபிசருங்களையே அலற விட்டாராமே லேடி டீச்சர்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாவட்டம் ஆத்தூர்ல இருக்குற கவர்மெண்ட் பள்ளில ஒரு ேலடி டீச்சரு சரியா பாடம் நடத்தாததுடன், தன்னை எதிர்த்து கேட்க யாரும் இல்லனு பகட்டுத்தனமா இருந்திருக்காங்க. அதுமட்டுமில்லாம சக வாத்தியாருங்கள பத்தியும், அங்கு படிக்கும் பிள்ளைகளோட பெற்றோர் பத்தியும் அவதூறா பேசியதால, முதன்மை ஆபிசரு, லேடி டீச்சர சஸ்பெண்ட் பண்ணிட்டாரு. இந்த விவகாரம் தெரிஞ்சு பள்ளிக்கூடத்துக்கு வந்த லேடி டீச்சரு, சகட்டு மேனிக்கு சாமியாடிருக்காங்க. விவகாரம் கைமீறி போனதால, டீச்சர சமாதானப்படுத்த காக்கி ஆபிசருங்க ஸ்கூலுக்கு வந்துருக்காங்க. பிரச்னைய அவங்க பக்கம் திருப்பிய லேடி டீச்சரு, என்னை கைப்பிடிச்சு இழுத்துட்டாருனு ரூட்ட மாத்தியிருக்கு. இதனால பதறிப்போன காக்கிங்க, லேடி கான்ஸ்டபிள் இல்லாம வந்தது புது தலைவலியா போச்சுனு, பதறியடிச்சு போயிட்டாங்களாம்.’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பதவி போச்சுன்னா எல்லாமும் போச்சுனு சும்மாவா சொன்னாங்க… அப்படி அவதிப்படும் மாஜி இலை மந்திரி ஒருவரை பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தமிழ்நாட்டுல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில நடக்கப்போகுது. அதேபோல மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துலயும் அதுக்கான வேலைகள் மும்முரமாக நடந்துகிட்டு வருது. இதுல, இலைகட்சிக்காரங்கள்ல பெரும்பாலோனோர், எலக்‌ஷன்ல போட்டி போட முன்வரலையாம். இதனால இலைகட்சியைச் சேர்ந்த நிர்வாகிங்க, இலை சின்னத்துல ேபாட்டி, போட விருப்பமனு கொடுங்கன்னு வீடு, வீடாக சென்று கட்சி நிர்வாகிகளை கைய புடுச்சி இழுக்காத குறையாக கூப்பிடுறாங்களாம். அதுக்கு, வீரமான மாஜி அமைச்சரு, 10 வருஷமாக சம்பாதிச்ச பணத்துல வார்டுக்கு 5 எல் கொடுக்க ேவண்டும் என்று நெருக்கடி கொடுத்து இருக்கிறார்களாம். அப்புறம், இந்த கையில் ‘லகரம்’ வந்தால்… அந்த கையில் நாங்க எலக்‌ஷன்ல போட்டி போட விருப்ப மனுவோடு வருவோம்னு மிரட்டுறாங்களாம். அமைச்சராக இருந்தபோது அடக்கி வாசித்த சிறிய பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் இப்போது பதவியில் இல்லை என்பது தெரிந்ததும் பணம் கேட்டு நம்மையே மிரட்டுறாங்க.. புது ஆளை எலக்‌ஷன்ல நிற்க வைத்து ஜெயிக்க வைத்து காட்டுகிறேன் என்று மார்தட்டினாராம். அதை கேட்ட அடிபொடிகள் அண்ணே காலம் மாறிபோச்சு… கரன்சி கொடுத்தால் நமக்கு ஓட்டு.. இல்லாவிட்டால் நமக்கு நம்ம கட்சிக்காரங்களே வேட்டு வைத்துவிடுவாங்க போல என்று எச்சரிக்கை சமிக்ஞை கொடுத்தாங்களாம். அதற்கு மாஜி அமைச்சரின் மற்றொரு தரப்போ,  நாங்களே பணம் இல்லாம கடன் வாங்கி செலவு செஞ்சிகிட்டிருக்கோம்னு சொல்றாங்களாம். இதனால திருப்பத்தூர் மாவட்டத்துல பெரும்பாலான இடங்களில் ஆளுங்கட்சி போட்டியே இல்லாமல் ஜெயிக்கும்னு இலை கட்சிக்காரங்களே பேசி வர்றாங்க…’’ என்றார் விக்கியானந்தா. …

Related posts

பிரசாரத்தில் வலிய வந்து வம்பில் சிக்கிய பெண் வேட்பாளர் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

இதுதானா உங்க டக்கு என சேலம்காரரின் முடிவை கிண்டல் செய்யும் தேனிக்காரரின் அணி பற்றி சொல்கிறார் wiki யானந்தா

சின்ன மம்மி உத்தரவால் கொதித்துப்போன சேலத்துக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா