உள்ளாட்சியில் நல்லாட்சி மலர திமுக கூட்டணி வெற்றிக்கு வித்திட்ட தமிழக மக்கள்: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நன்றி

சென்னை: உள்ளாட்சியில் நல்லாட்சி மலர மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்கு வித்திட்ட தமிழக மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மகத்தான வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இக்கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட்ட  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களும் மகத்தான முறையில் வெற்றி பெற்றுள்ளனர்.  மேலும் காங்கிரஸ், சிபிஐ, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும் மகத்தான முறையில் வெற்றிபெற்றுள்ளனர். உள்ளாட்சியில் நல்லாட்சி மலர மக்கள் இந்த அரிய வாய்ப்பினை அளித்துள்ளனர். இந்த மாபெரும் வெற்றியை அளித்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். கூட்டணியின் வெற்றிக்கு வித்திட்ட தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளையும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தேர்தல் அறிவித்த நாளிலிருந்து இந்த அணியின் வெற்றிக்கு பாடுபட்ட கட்சி அணிகளுக்கும், திமுகவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சிகளின் தலைவர்கள், ஊழியர்கள், தொண்டர்கள் என அனைவருக்கும்  நன்றி. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி, அதிகாரம் பெற்றிடவும், நகர்ப்புற உள்ளாட்சி சட்டம் நிறைவேற்றிடவும், நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தினை அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு விரிவுபடுத்தவும், அரசு பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்திடவும், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோரை படிப்படியாக பணி நிரந்தரம் செய்திடவும், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் அயராது பாடுபடுவார்கள் எனவும், ஊழல் – முறைகேடுகளுக்கு துளியளவும் இடமளிக்காமல் நேர்மையான முறையில், வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றுவார்கள் என்பதை உறுதிபட கூற விரும்புகிறோம்.  இவ்வாறு அதில் கூறியுள்ளார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை