உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வசதியாக சென்னையில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் இயக்கம்: 18ம் தேதி கோயம்பேட்டில் இருந்து புறப்படுகிறது

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வசதியாக வருகிற 18ம் தேதி சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்ல வசதியாக 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக 500 சிறப்பு பஸ்களை இயக்க மாநில போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சுமார் 2 கோடியே 79 லட்சத்து 56 ஆயிரம் பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.மாநிலம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புறங்களில் மட்டுமே இத்தேர்தல் நடைபெறுகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தபோது பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்பட்டன. இந்த தேர்தலில் சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ் பயணத்திற்கு பொது மக்கள் அதிக அளவு முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டவில்லை. இதனால் சிறப்பு பஸ்கள் இயக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.பொதுவாக வார இறுதிநாளான வெள்ளிக்கிழமைகளில் பஸ்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். சனிக்கிழமை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை மேலும் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால் 18-ந்தேதியான வெள்ளிக்கிழமை அன்று கூடுதலாக பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க விரும்பும் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள கூடும் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 2 லட்சம் பேர் பயணம் செய்யலாம் என்று எதிர்பார்க்கிறோம். அதனால் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையைவிட கூடுதலாக 500 பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். திருச்சி, கும்பகோணம், மதுரை போக்குவரத்து கழகத்தின் பஸ்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பஸ்களாக இயக்கப்பட உள்ளன.கிராமப்புற உள்ளாட்சி தேர்தலின்போது பொதுமக்கள் அதிக அளவு முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் அந்த அளவுக்கு இந்த தேர்தலில் வெளியூர் செல்ல பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. அதனால் குறைந்த அளவிலான சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அரசு விரைவு பஸ்களிலும் எதிர்பார்த்த அளவிற்கு இடங்கள் நிரம்பவில்லை. ஆனாலும் பொதுமக்கள் நலன் கருதி கடைசி நேரத்தில் வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம் என்ற அடிப்படையில் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 18-ம் தேதி பொதுமக்களின் தேவையை அறிந்து சூழ்நிலைக்கு ஏற்ப மேலும் கூடுதலாக பஸ்களை இயக்கவும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை