உள்ளாட்சிகளிலும் நம்ம ஆட்சி தொடர உதயசூரியன், மதச்சார்பற்ற கூட்டணி கட்சியின் சின்னங்களுக்கும் வாக்களிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு

சென்னை: மாநில உரிமைக்கும், தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும்  உள்ளாட்சிகளிலும் நம்ம ஆட்சி தொடரட்டும். உதயசூரியனுக்கும், மதச்சார்பற்ற  கூட்டணிக் கட்சியின் சின்னங்களுக்கும் வாக்களிக்குமாறு உங்களை உரிமையோடு  கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ  வெளியிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வீடியோவில் தேர்தல் பிரசார செய்தி வெளியிட்டார். அதில் அவர் பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்கள் ஆகியுள்ளது. கழக அரசு அமைந்தால், நாங்கள் என்னவெல்லாம் செய்கிறோம் என்று சொன்னோமோ, அதில் பெரும்பாலான வாக்குறுதிகளை இந்த எட்டு மாதங்களில் நிறைவேற்றியிருக்கிறோம்.  நமது ஆட்சியை வழிநடத்துவது திராவிட மாடல் சிந்தனை அது என்ன திராவிட மாடல் சிந்தனை அப்படி என்று கேட்பவர்களுக்கு என்னுடைய பதில், சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி புரியும்படி சொல்கிறேன். வாய்ப்புகளும் வளங்களும்  தமிழ்நாட்டில் இருக்கின்ற எல்லா வரம்பு மக்களுக்கும், எல்லா மாவட்டத்திலிருக்கும் மக்களுக்கும், சரிசமமாக போய்ச் சேர வேண்டும். இதில் எந்த சாதி, மத, வர்க்க, பாலின வேறுபாடும் இருக்கக் கூடாது. ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது, அங்கு இருக்கின்ற ஒரு சிலருக்கு மட்டும் போய்ச்  சேருவதற்கு பதிலாக, அங்கு வாழ்கின்ற எல்லா மக்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டும், அதுதான் உண்மையான வளர்ச்சி, அது தான் திராவிட சிந்தனை. நாங்கள் கொண்டு வருகின்ற ஒவ்வொரு திட்டமும் இந்த சிந்தனையின் அடிப்படையில் தான் உருவாக்கப்படுகிறது.சமூக  நீதி என்றால் தமிழ்நாடு தான் என்பதை இந்தியாவிற்கே காட்டினோம். பட்டியலின, பழங்குடி மக்களின் கல்விக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பு திட்டங்களைக் கொண்டு வந்தோம். இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம் என்று  மக்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி, அரசாங்கத்தோட அணுகுமுறையில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். திமுக-வை, இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று காலம், காலமாக சொல்லப்பட்ட பொய்யை  இன்றைக்கு சுக்கு நூறாக உடைத்திருக்கிறோம். உதாரணத்திற்கு, இந்த திமுக ஆட்சியில் தான் ஆக்கிரமிப்பில் இருந்து ரூ.1789 கோடி மதிப்புள்ள 180 ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டிருக்கிறோம். தேர்தல் அறிக்கையில் சொன்ன மாதிரியே, கோவில் சீரமைப்புக்காக ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்க ஆரம்பித்திருக்கிறோம். ஆனால், மதத்தை வைத்து அரசியல் செய்கிறவர்களுக்கு தமிழ்நாட்டைப் பார்த்தால் ‘பீபி’ ஏறத்தான் செய்யும். என்னடா, நாமும் என்னவெல்லாமோ செய்து பார்க்கிறோம், அந்த மக்களுடைய ஒற்றுமையை ஒன்றுமே செய்ய  முடியவில்லை என்று வெறுப்பு இருக்கத்தான் செய்யும். நிறைய செலவு செய்து பயிற்சி வகுப்புக்கு செல்பவர்களுக்குத் தான் பெரும்பாலும் நீட் மூலமாக மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கிறது. இதனால், வசதி இல்லாத ஏழை  மாணவர்களுக்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைந்து விட்டது. இது எவ்வளவு பெரிய சமூக அநீதி. இந்த அநீதியை எதிர்த்துத் தான் நமது சட்டமன்றத்தில், நீட் வேண்டாம் என்று சட்டத்திருத்தம் செய்தோம். அந்த சட்ட முன்வரைவை ஆளுநருக்கு அனுப்பி வைத்தால், ஆளுநர் அதை நமக்கே திருப்பி அனுப்புகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் கொண்டு வரும் சட்டத்தை தடுக்க  நினைப்பது ஜனநாயகப் படுகொலை தானே. ஆனால் முந்தைய ஆட்சி மாதிரி இல்லாமல்,  நாம் இந்த அநீதிக்கு எல்லாம் துணை போக மாட்டோம். ஒரு போதும் நமது உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம். ஒவ்வொரு சவாலையும் போராடி வெல்வோம். நாம்  எல்லாம் ஒன்றாகத் தான் இருக்கிறோம். இனிமேலும் ஒன்றாகத் தான் இருப்போம் என்பதை இந்த உள்ளாட்சித் தேர்தலின் முடிவு அவர்களுக்கு காட்டட்டும். மாநில உரிமைக்கும், தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் உள்ளாட்சிகளிலும் நம்ம ஆட்சி தொடரட்டும். உதயசூரியனுக்கும், மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சியின்  சின்னங்களுக்கும் வாக்களிக்குமாறு உங்களை உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன். என்றென்றும் உங்களுடன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நாம் இந்த அநீதிக்கு எல்லாம் துணை போக மாட்டோம். ஒரு போதும் நமது உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்….

Related posts

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்