உலக வெப்பமயமாதலை குறைத்து நெல் சாகுபடியில் அதிக விளைச்சல் பெறலாம்

விதைப் பரிசோதனை அலுவலர் ஆலோசனைகாலநிலை மாற்றங்களால் ஏற்படும் உலக வெப்பமயமாதலைக் குறைத்து நெல் சாகுபடியில் அதிக விளைச்சல் பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நெல்லை விதைப் பரிசோதனை அலுவலர் ஆனந்தி ராதிகா விவசாயிகளுக்கு ஆலோசனை கூறியுள்ளார். இதுதொடர்பாக நெல்லை விதைப் பரிசோதனை அலுவலர் ஆனந்தி ராதிகாவிடம் பேசினோம்: “நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட விவசாய பெருமக்கள் தற்போது பிசான நெல் சாகுபடி செய்து வருகின்றனர். காலநிலை மாற்றங்கள் உலகளவில் பெரியளவில் ஏற்பட்டு அதனால் பயிர்களுக்கு அந்தந்த பருவங்களில் தேவையான மழைப்பொழிவு குறைதல் அல்லது மழைப்பொழிவு இல்லாது போகுதல், குறைந்த கால நேரத்தில் அதிகளவு மழைப்பொழிவு மற்றும் அதிகளவு வெப்பம் போன்றவை ஏற்பட்டு பயிர் சாகுபடியை பெரிதும் பாதிக்கிறது என தெரியவந்துள்ளது. இக்காலநிலை மாற்றங்களுக்கு கார்பன்டை ஆக்டைடு மற்றும் மீத்தேன் எனப்படும் பசுமை இல்லா வாயுக்கள் காரணம் என அறியப்பட்டுள்ளது. இவற்றில் மீத்தேன் வாயு கணிசமான அளவுகளில் நெல் சாகுபடியின் போது உமிழப்படுகிறது எனவும் தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் நமது விவசாய பெருமக்கள் தங்களின் நெல் பயிருக்கு தேவைக்கு அதிகமாக வயலில் நீரை தேக்கி வைக்கின்றனர். நெல் வயல்களில் இருந்து வெளியேறும் மீத்தேன் வாயு ஒவ்வொரு ஆண்டும் ஒரு சதவிகிதம் அதிகரித்து வருகிறது. மீத்தேன் வாயு வான்வெளி மண்டலங்களில் பத்து வருடங்கள் நிலைப்பு தன்மை உடையவையாக இருக்கின்றன. இதனால் உலக வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. நெல் வயல்களிலிருந்து வெளியேறும் மீத்தேன் அளவை குறைக்க தகுந்த நீர் மேலாண்மை, நெல் விளைச்சலை பாதிக்காத வகையில் நெல் பயிர் சாகுபடி குறித்த மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். நெல் அறுவடைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு நெல் வயல்களிலிருந்து மீத்தேன் வாயு அதிகளவில் வெளியேறுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மீத்தேன் வெளியேறும் அளவு பயிர்களுக்கு போடப்படும் ரசாயன உரங்களின் அளவைப் பொறுத்து மாறுபடுகின்றது. அதிக நைட்ரஜன் உரங்கள் இடும்போதும், அதிகளவில் வயலில் நீர் தேங்கி நிற்கும் போதும் ஆக்ஸிஜனேற்றம் ஏற்பட்டு அங்கக கழிவுகளுடன் மக்கி மீத்தேன் வாயுவாக வெளியாகிறது. மேலும் காலை மற்றும் இரவு வேளையை விட மதிய வேளையில் சூரிய வெப்பம் அதிகமாகும் போது மீத்தேன் வாயு அதிகளவில் வெளியாகின்றது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து நீர்பாய்ச்சும் வயலைவிட, நீர் வற்றியபிறகு நீர் பாய்ச்சும் வயலில் அதிக விளைச்சல் எடுக்கப்பட்டுள்ளது. மீத்தேனும் இவ்வயல்களிலிருந்து குறைந்த அளவே வெளியாகி உள்ளது. எனவே சரியான அளவில் பயிருக்கு தழைச்சத்து இடுவதும் நீர் வற்றிய பிறகு நீர்பாய்ச்சும் முறையே மிகவும் சிறந்தது என கண்டறியப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் நெல்பயிருக்கு காய்ச்சலும் பாய்ச்சலும் முறையில் நீர்பாசனம் செய்ய வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அளவில் தழைச்சத்து உரங்களை இட்டு அதிக விளைச்சல் பெறுவதோடு, காலநிலை மாற்றங்களால் உலக வெப்பமயமாதலை  தடுப்பதை உறுதி செய்து பயிர் சாகுபடி செய்ய வேண்டும்” என்கிறார். …

Related posts

வளம் கொடுக்கும் வான்கோழி!

பயிர்களைக் காக்கும் உயிர்வேலி!

வெள்ளாமைக்கு துணை நிற்கும் நுண்ணுயிரிகள்!