உலக தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் தாம்பரம் ரயில் நிலைய வளாகம் ₹1000 ேகாடியில் மறுசீரமைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை, ஜூலை 13: தாம்பரம் ரயில் நிலைய வளாகம் பல்வேறு நவீன வசதிகளுடன் ₹1000 ேகாடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தினசரி தாம்பரம் ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து சென்னை, செங்கல்பட்டு மார்க்கமாக பல்வேறு பகுதிகளுக்கு, கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளுக்காக பயணித்து வருகின்றனர். இதனால், இந்த ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். பயணிகளின் வசதிக்காக, சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் தினசரி ஏராளமான மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில்களுக்கான பணிமனையும் உள்ளதால் மிகவும் முக்கியமான ரயில் நிலையமாக பார்க்கப்படுகிறது. இந்த ரயில் நிலையத்தில் ஏற்கனவே, எஸ்கலேட்டர், லிப்ட், நடைமேடை, ரயில்வே காவல் நிலையம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

சென்னையின் 3வது மிகப்பெரிய ரயில் முனையமாக தாம்பரம் ரயில் நிலையம் தற்போது இருந்து வருகிறது. இதனால், எழும்பூர் மற்றும் சென்ட்ரலுக்கு பதிலாக தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி, கோவை, நாகர்கோவில் உள்பட தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட புதிய ரயில்கள் தற்போது தாம்பரத்தில் இருந்துதான் புறப்படுகின்றன. இதுதவிர ஆந்திரா வழியாக வடமாநிலம் செல்லும் ரயில்கள் சென்ட்ரலுக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்பட தொடங்கி உள்ளன. இனி சென்னைக்கு புதிதாக அறிவிக்கப்படும் எந்த ரயிலாக இருந்தாலும் தாம்பரத்தில் இருந்தே புறப்படும் என்று தெரிகிறது.

அந்த அளவிற்கு தாம்பரம் ரயில் நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவெடுத்துள்ளது. ஆனால் தாம்பரம் ரயில் நிலையம், சென்ட்ரல், எழும்பூர் போல் மிகப்பெரிய அளவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ள ரயில் நிலையமாக இல்லை. இந்நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தை ₹1000 கோடி செலவில் உலக தரத்தில் மறுசீரமைக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதன்மூலம், இந்த ரயில் நிலையத்தில் கழிவறைகள், டிஜிட்டல் பலகைகள், எஸ்கலேட்டர்கள், புதுப்பிக்கப்பட்ட இருக்கைகள், வேளச்சேரி சாலை, ஜிஎஸ்டி சாலை என இருபக்கமும் பிரமாண்ட முகப்புகள், வாகனங்கள் வந்து செல்லும் வழி, நடை மேம்பாலங்கள், பார்க்கிங் வசதி, குடிநீர் வசதிகள், விளக்குகள், நடைமேடைகள் அனைத்தும் உலக தரத்தில் சீரமைக்கப்பட உள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்தின் உள்நுழைவு, வெளியேறும் பகுதி, ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் செல்லும் பகுதி, வேளச்சேரி சாலையில் ரயில் நிலையத்தின் வெளியேறும் பகுதி, உள்ளே வரும் பகுதி என எல்லாமே மிக அகலமாக மாறுகிறது. பசுமை பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது. ரயில் நிலைய கட்டிடங்கள் முழுமையாக ஐடி நிறுவனங்களை போல் பார்க்க மிக அழகாக மாற்றப்பட உள்ளது. இது தொடர்பான புதிய புகைப்படங்கள் வெளியாகி, ரயில் பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Related posts

மணல் லாரி உரிமையாளர்கள் வரும் 9ம் தேதி உண்ணாவிரதம்

159 பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி ஆணை

மாட்டம்மை நோய் பாதிப்புக்கு தடுப்பூசி