உலகளாவிய டெண்டர் மூலமும் தடுப்பூசி வாங்க முடியாமல் தவிப்பு: மாநில அரசுகளுடன் நேரடி ஒப்பந்தம் செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் மறுப்பு

சண்டிகர்: மத்திய அரசு செய்த தாமதத்தால் உலகளாவிய டெண்டர் மூலமும் கொரோனா தடுப்பூசி வாங்க முடியாமல் மாநில  அரசுகள் தவிக்கின்றன. மாநில அரசுகளுடன் நேரடி ஒப்பந்தம் செய்து கொள்ள முன்னணி தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மறுத்துள்ளன.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. பாரத் பயோடெக்கின் கோவாக்சின், மற்றும் சீரம் நிறுவனத்தின்  கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளன. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி  தரப்பட்டுள்ள போதிலும் இன்னும் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால், தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க, மாநில அரசுகளே  நேரடியாக மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியை கொள்முதல் செய்ய முயற்சி எடுத்து வருகிறது.

இதற்காக தமிழகம் உள்ளிட்ட  பல்வேறு மாநில அரசுகள் உலகளாவிய டெண்டர் ஒப்பந்தத்தை கோரி உள்ளன. இதன் மூலம் பல கோடி தடுப்பூசிகளை கொள்முதல்  செய்து மக்களுக்கு வழங்க முடிவெடுத்துள்ளன. ஆனால் அதிலும் சிக்கல் எழுந்துள்ளது.

சமீபத்தில் பஞ்சாப் மாநில அரசு அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசியை வாங்க முயற்சி மேற்கொண்டது. ஆனால் அந்த  நிறுவனம் தனது கொள்கையின்படி மாநில அரசுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ள முடியாது என்றும், மத்திய அரசுடன் மட்டுமே  நேரடி பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றும் மறுத்து விட்டது. இதே போல அமெரிக்காவின் மற்றொரு மருந்து நிறுவனம் பைசரும்  தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநில அரசின் தடுப்பூசி கொள்முதல் அதிகாரி விகாஸ் கார்க்  கூறுகையில், ‘‘நாங்கள் ஸ்புட்னிக் வி, பைசர், மாடர்னா, ஜான்சன்  அண்ட் ஜான்சன் உள்ளிட்ட எல்லா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடமும் உலகளாவிய டெண்டர் குறித்து அணுகி உள்ளோம். ஆனால்,  மாடர்னா நிறுவனத்திடமிருந்து மட்டுமே பதில் வந்துள்ளது. அந்நிறுவனமும் நேரடி ஒப்பந்தத்திற்கு மறுத்துள்ளது’’ என்றார். பஞ்சாப்பில்  தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதால் கடந்த 3 நாட்களாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லி அரசுக்கும் இதே பதிலை  இவ்விரு நிறுவனங்களும் கூறியிருப்பதாக முதல்வர் கெஜ்ரிவாலும் தெரிவித்துள்ளார்.மாடர்னா, பைசர் நிறுவனங்கள் மத்திய அரசுடன் மட்டுமே நேரடி பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறியிருப்பதால் மாநில அரசுகளின்  உலகளாவிய டெண்டர் முயற்சிக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அப்படியே டெண்டர் கிடைத்தாலும், இந்த ஆண்டு இறுதிக்குள் மட்டுமே  தடுப்பூசி விநியோகிக்க முடியும் என சில தகவல்கள் கூறுகின்றன.தற்போது உலகம் முழுவதும் தடுப்பூசிக்கு பெரும் தேவை இருந்து வருகிறது. அனைத்து நாடுகளும் தடுப்பூசி பெற போட்டு போடுகின்றன.  எனவே புதிதாக டெண்டர் உறுதியானாலும் கூட தடுப்பூசிகள் ஆண்டு இறுதியில் மட்டுமே சப்ளை செய்ய முடியும் என சில நிறுவனங்கள்  கூறுகின்றன. பைசர் நிறுவனம் ஏற்கனவே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மற்ற நாடுகளில் வழங்கப்படும் சில விலக்குகள்,  பாதுகாப்பு நடைமுறைகளை மத்திய அரசும் தர வேண்டுமென அந்நிறுவனம் கோருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் இன்னும் முடிவு  எட்டப்படாமல் உள்ளது. தடுப்பூசி கொள்முதல் தொடர்பாக முன்கூட்டியே மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் தற்போது இக்கட்டான  சூழலில் தடுப்பூசியே கிடைக்காமல் மக்கள் அவதிப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வாளர்கள் கவலை  தெரிவிக்கின்றனர்.ரிஸ்க் எடுக்கவில்லைஆக்சிஜன் சப்ளைக்கு உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட அரசின் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ள முன்னணி வைராலஜிஸ்ட் டாக்டர்  ககன்தீப் கங்க் கூறுகையில், ‘‘உலகின் பிற நாடுகள் தடுப்பூசி வாங்குவதில் ஓராண்டுக்கு முன்பே ரிஸ்க் எடுத்தன. ஆனால் மத்திய அரசு  அவ்வாறு செய்யவில்லை. மொத்தமாக தடுப்பூசியை கொள்முதல் செய்யவும், மருத்துவ ஆய்வுக்கு நிதி ஒதுக்கவும் தவறி விட்டது. கடந்த  ஆண்டு மார்ச் மாதம், தடுப்பூசிகள் கண்டுபிடிப்பு முழுமை அடையாத போதே அமெரிக்கா ரூ.73,000 கோடி ஒதுக்கியது. இதுபோல்  செய்யாமல் மத்திய அரசு தாமதப்படுத்தியதால் தற்போது தடுப்பூசி வாங்குவதில் நமக்கு ஒரு சில வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. இப்போது கொள்முதல் செய்யத் தொடங்கினாலும் ஆண்டு இறுதியில் தான் நமக்கு கூடுதல் தடுப்பூசிகள் கிடைக்கும்’’ என்றார்.அங்கீகாரம் பெற கோவாக்சின் தீவிரம்ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் இதுவரை அங்கீகாரம்  கொடுக்கவில்லை. இதனால், இந்த தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது சிக்கல் ஏற்படுமா என்ற  சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் பெற உலக சுகாதார நிறுவனத்திடம் 90% ஆவணங்களை  சமர்பித்துள்ளதாக மத்திய அரசுடன் நடந்த ஆலோசனை கூட்டதில் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள உள்ள  ஆவணங்களை வரும் ஜூன் மாதம் சமர்ப்பிக்கப்படும் என்றும் விரைவில் அங்கீகாரம் பெறப்படும் என்றும் பாரத் பயோடெக் நிறுவனம்  கூறி உள்ளது….

Related posts

திருப்பதி கோயில் பிரசாத லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு கலப்பு: வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

`ஏழுமலையானே மன்னிக்க மாட்டார்…’ திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பா?.. மாஜி அறங்காவலர் குழு தலைவர்கள் ஆவேசம்

20 மலையாள நடிகைகளுக்கு மிக மோசமான பாலியல் சித்ரவதை: சிறப்பு விசாரணைக் குழு அதிர்ச்சி