உறவுகள் மேம்படும்

தமிழக, கேரள உறவில் நீண்டகால நெருடலாக இருக்கும் ஒரு விஷயம் – பெரியாறு அணை. விவசாயம், குடிநீர் உள்ளிட்ட தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகள் அங்குள்ள சில அமைப்புகளால் அரசியலாக்கப்படுவதால் பெரியாறு அணையில் நீர் தேக்குவது சிக்கலாகவே நீடிக்கிறது. தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, நல்வாய்ப்பாக, தமிழக, கேரள முதல்வர்கள் இடையில் பரஸ்பர புரிதல், நட்புணர்வு நிலவுகிறது. பராமரிப்புப் பணிக்காக, அணைப்பகுதியில் உள்ள சில மரங்களை வெட்ட அனுமதி கோரி சில நாட்ளுக்கு முன்பு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். பெரியாறு அணை பலப்படுத்தும் பணிகளுக்கு கேரள அரசு உரிய ஒத்துழைப்பை தந்தால் அதை தமிழக அரசு சிறப்புற நிறைவேற்றும்.இரு மாநில மக்களின் உறவில் பெரியாறு அணை முக்கியப் பங்கு வகிக்கிறது. அணையில் நீர்தேக்குவது குறித்து முடிவு செய்வதற்காக 1979ம் ஆண்டு தமிழக – கேரள அமைச்சர்கள், அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை திருவனந்தபுரத்தில் நடந்தது. அன்றைய தமிழக முதல்வர் எம்ஜிஆர், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜா முகமது மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் தான் அணையின் நீர்த்தேக்க அளவு 152ல் இருந்து 136 அடியாக குறைக்க முடிவெடுக்கப்பட்டது. அன்று துவங்கியது பிரச்னை.இதற்கு பிறகு தான் தமிழகத்தில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பிலான விவசாயம் குறைந்தது. அணையின் நீர்மட்டத்தை குறைக்கும் முடிவு, ஏராளமான தென் தமிழகத்து விவசாயிகளை நாடோடிகளாக, கட்டிடக் கூலிகளாக மாற்றியது. 152 அடியாக இருந்தபோது 8,436 ஏக்கராக இருந்த நீர் தேங்கும் பரப்பளவு, 136 அடியாகக் குறைக்கப்பட்ட போது 7,080 ஏக்கராக குறைந்தது. இந்த 1,356 ஏக்கரில்தான் கேரள முக்கியப் புள்ளிகள் பலர் சொகுசு வீடுகள், ரிசார்ட்டுகள் கட்டியுள்ளனர். நீர்மட்டம் உயர்த்தப்பட்டால், ஆக்கிரமிப்பாளர்கள் சிக்கலை சந்திக்க வேண்டும். இவர்கள் தரும் அழுத்தம் காரணமாகவே, பெரியாறு அணை விவகாரம், ஒரு தீர்வை எட்ட முடியாமல் இழுத்துக் கொண்டே செல்வதாக தென்மாவட்ட விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.இதை முறியடிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் பலமான வாதங்களை முன்வைத்து வருகிறது. தமிழகத்திலுள்ள மின் உற்பத்தி திட்டங்களில் கிடைக்கும் மின்சாரத்தில் பாதி மத்திய தொகுப்பிற்கும், அங்கிருந்து பிற மாநிலங்களுக்கும் பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படுவதிலும் பாதி கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு போய் சேருகிறது. தன்னிடம் உபரியாக இருக்கும் பல்வேறு இயற்கை வளங்களை தமிழகம் பிற மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறது. தமிழகத்தோடு நெருங்கிய உறவும், பரிவர்த்தனைகளும் கொண்ட நீர் உபரி மாநிலமான கேரளா அவ்வாறு நடந்து கொண்டால் இரு மாநில மக்களும் மகிழ்வார்கள். உறவுகளும் மேம்படும்….

Related posts

‘மூன்றில் ஒரு பங்கு’

பாஜ அரசின் அவலம்

அனல்பறந்த விவாதம்