உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ₹13.85 லட்சம், 200 கிராம் தங்க நகைகள் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை: விருகம்பாக்கம் தொகுதி மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ₹13.85 லட்சம் மற்றும் 200 கிராம் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் பறிமுதல் செய்தனர்.தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதிக்கும் 9 தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே நேற்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த ஒருவர் பறக்கும் படையினரை கண்டதும் வேகமாக செல்ல முயன்றார். உடனே பறக்கும் படையினர் பைக்கில் வந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், கோயம்பேடு பகுதியை சேர்ந்த ஜெகன் (30) என்றும், கோயம்பேடு மார்க்கெட்டில் தேங்காய் மண்டி நடித்து வருபவர் என்றும் கூறினார். அவர் பைக்கில் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் ₹7 லட்சம் இருந்தது. ஆனால், அதற்கான ஆவணம் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்:சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை தேர்தல் சிறப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று விஜயவாடாவில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம்  வந்த பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கி வந்த ஒரு நபரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர். அதில் ₹6 லட்சத்து 85 ஆயிரம் மற்றும் 200 கிராம் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. அந்த நபரிடம் விசாரித்ததில், ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சுரேஷ்பாபு (62) என்பதும், தொழில் சம்பந்தமாக பணத்தை கொண்டு வந்தததாகவும் கூறியுள்ளார். ஆனால், அவரிடம் அதற்கான ஆவணம் இல்லாததால், பணம் மற்றும் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related posts

கடப்பாவிலிருந்து சென்னைக்கு அனுப்ப இருந்தது ₹1.60 கோடி செம்மரம் கடத்திய 4 பேர் கைது

பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தென்காசியில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்