உரிமை கோராத டெபாசிட்

வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் எல்லாருமே செல்வந்தர்களாக இருந்தது ஒரு காலம். அது மலையேறி போய்விட்டது. பின்னர், நடுத்தர வர்க்கத்தினர் வங்கிகளில் சேமிப்பதை ஒரு பழக்கமாக மாற்ற, இப்போது, ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி எல்லோருமே வங்கிகளில் கணக்கு வைத்திருக்கிறார்கள். சிறுக சிறுக சேமிப்பதற்கும், அவசரத்துக்கு நகை கடனோ, வேறு கடனோ வாங்க இந்த வங்கி கணக்கு ஏழை, நடுத்தர மக்களுக்கு உதவி செய்கிறது. தற்போது, இந்தியாவில் 12 பொதுத்துறை வங்கிகள், 22  தனியார் வங்கிகள், 44 வெளிநாட்டு வங்கிகள், 43 வட்டார கிராம வங்கிகள், 1484 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், 96 ஆயிரம் ஊரக கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இவற்றில் கோடிக்கணக்கான சேமிப்பு கணக்குகள் உள்ளன. இந்த கணக்குகளில் 10 ஆண்டாக உரிமை கோரப்படாத டெபாசிட் பணம் டெபாசிட்தாரர்கள் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு ரிசர்வ் வங்கிக்கு மாற்றம் செய்யப்படுகிறது. அதென்ன உரிமை கோரப்படாத டெபாசிட் பணம்? ஒரு சேமிப்பு கணக்கில் 10 ஆண்டுகளாக பணம் போடவோ, எடுக்கவோ இல்லை என்றால் அந்த கணக்கில் உள்ள பணம் கோரப்படாத பணமாக கருதப்படுகிறது. இப்படி கடந்த 2021 மார்ச் முடிவில் ரூ.39,264 கோடி உரிமை கோரப்படாத டெபாசிட் பணம் இருப்பதாக ரிசர்வ் வங்கி புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அது எப்படி, வங்கியில் போட்ட பணத்தை அதன் உரிமையாளர் எடுக்காமல் எப்படி விடுவார் என்ற கேள்வி எழும். ஆனால், டெபாசிட்தாரர் இறந்துவிட்ட பிறகு அவரது வாரிசுதாரர்களுக்கு அந்த வங்கி கணக்கு பற்றிய விவரம் தெரியாவிட்டால் என்ன செய்வது? அது உரிமைகோரப்படாத டெபாசிட்டாகவே மாறிவிடும். இப்படிப்பட்ட டெபாசிட்களின் வாரிசுதாரர்கள் விவரத்தை கண்டறிந்து பணத்தை அவர்களிடம் ஒப்படைப்பதில் வங்கிகள் பெரிய அளவில் அக்கறை காட்டுவதில்லை என்பது புகார். பெயரளவில் ஒரு தபால் போடுவதோடு சரி. ஆனால், நம்மில் பலருக்கு வீடுமாறும்போது தங்கள் முகவரி மாற்றத்தை வங்கியில் தெரிவிக்கும் பழக்கமே கிடையாது. விளைவு சிறுக சிறுக சேமித்த பணம் உரிமை கோரப்படாமல் அரசுக்கே போய்விடுகிறது. இன்னொன்று வங்கியில் உள்ள பணத்தை வாரிசுதாரர்கள் எடுப்பதில் உள்ள சட்டச்சிக்கல்கள். தாசில்தார் கொடுத்த வாரிசு சான்றிதழ் போதாது, நீதிமன்றத்தில் இருந்து ஆணை வாங்கி வா என்று வங்கிகள் அலைக்கழிக்கின்றன. அலைந்து திரிந்து இந்த ஆணையை வாங்க கையில் காசு அல்லது நேரம் இல்லாத பலர் அப்படியே விட்டுவிடுகின்றனர். இந்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், டெபாசிட்தாரரின் பணம் அவரது உண்மையான வாரிசுதாரர்களுக்கு போய் சேர நடவடிக்கை எடுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தின் கதவுகள் தட்டப்பட்டுள்ளன. இது முக்கியமான விஷயம் என்று கவனத்தில் கொண்ட நீதியரசர்கள், ஒன்றிய அரசு, ரிசர்வ் வங்கிக்கு  நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர். விரைவில் இந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புவோம். அதே நேரத்தில், நம் பணம் நமக்கு பிறகு நம் வாரிசுகளுக்கு கிடைப்பதை உறுதி செய்வதில் நமக்கு பெரும் பங்கு உள்ளது. எந்தெந்த வங்கிகளில் கணக்கு உள்ளது என்ற விவரத்தை குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொண்டாலே இப்படி, உரிமை கோராத டெபாசிட்கள் குறைந்துவிடும். ஒருவேளை இதுவரை செய்யாதவர்கள் கூட இன்றே, தங்கள் கணக்கு விவரங்களை குடும்பத்தாரிடம் தெரிவியுங்கள். நம் உழைப்பால் கிடைத்த பணத்தை வீணாகவிடக்கூடாது என்று உறுதி ஏற்போம்….

Related posts

வரம்பு மீறல் கூடாது

முற்றுப்புள்ளி

இது தவறான செயல்