உரம் தொடர்பான தகவல்களை பெறவும் புகார்களை கூறவும் மாநில அளவிலான உதவி மையம்!: வேளாண்மை துறை அறிவிப்பு

சென்னை: உரம் தொடர்பான தகவல்களை பெறவும் புகார்களை கூறவும் மாநில அளவிலான உதவி மையம் அமைக்கப்பட்டிருப்பதாக வேளாண்மை துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி உரம் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 93634 40360 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு, அதிக விலைக்கு விற்பனை பற்றி செய்திகள் வெளியான நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக வேளாண்மை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாட்டில் நெற்பயிர் 18.5 லட்சம் ஹெக்டர் பரப்பிலும், சிறுதானியம், பயறுவகை பயிர்கள், எண்ணெய்வித்துக்கள், கரும்பு மற்றும் பருத்தி பயிர்கள் சேர்த்து 46.2 இலட்சம் எக்டர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான உரங்கள், மாநிலத்தில் உள்ள 8,100 தனியார் விற்பனை நிலையங்கள் மற்றும் 4,354 கூட்டுறவு விற்பனை மையங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மாதந்தோறும் மாநில அரசுக்கு தேவையான மானிய உரங்களான யூரியா, டிஏபி,  பொட்டாஷ் மற்றும் காம்பளக்ஸ் உரங்கள் ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.  ஒதுக்கீடு செய்யப்பட்ட உரங்கள் சுமார் 15 உர நிறுவனங்கள் வாயிலாக மாநிலத்திற்கு வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் உரம் வழங்குதல், உர நகர்வு, உர கண்காணிப்பு மற்றும் தரப் பரிசோதனை முதலான பணிகள் மாவட்ட அளவிலான வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) அவர்களால் கண்காணிக்கப்படுகிறது. இது தவிர விவசாயிகளுக்கு உரம் தொடர்பான  கோரிக்கைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கவும் அதனை நிவர்த்தி செய்யவும், மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உரக் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  அவர்களின் உத்தரவுபடி மாநில அளவில் உரம் தொடர்பான தகவல்களை பெறவும் புகார்களை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்வதற்காகவும் உர உதவி மையம், சென்னை, வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் புகார்களை வாட்ஸ் அப் செயலி மூலமாகவும் பதிவு  செய்திடலாம். விவசாயிகள் தெரிவிக்கும் புகார்களை பதிவு செய்து உடனுக்குடன் தீர்வு வழங்குவதற்காக அலுவலர் ஒருவரும் தனியாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, வேளாண் பெருங்குடி மக்கள் உரம் தொடர்பான தகவல்கள் மற்றும்  புகார்களை 91 93634 40360 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு வாய்மொழியாகவும் மற்றும் வாட்ஸ்அப் செயலி மூலமாகவும் தெரிவித்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை