உயர்அழுத்த மின்கம்பி மீது உரசிய ரயில்வே கம்பத்தால் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் பயணிகள் அவதி வேலூரில் லாரி மோதியதால்

 

வேலூர், செப். 10: வேலூரில் லாரி மோதியதில் ரயில்வே கேட்டின் கம்பி உயர் அழுத்த மின்கம்பி மீது உரசியபடி நின்றது. இதனால் அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 1 மணிநேரம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். வேலூர் டவுன் ரயில் நிலையம் அருகே சென்னை- பெங்களூரு சாலையில் ரயில்வே கிராசிங் உள்ளது. இந்த ரயில் மார்க்கத்தில் விழுப்புரம்- சென்னை, திருவண்ணாமலை-சென்னை கடற்கரை, வேலூர் கண்டோன்மென்ட்- அரக்கோணம் உட்பட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 8.30 மணியளவில் வேலூர் நோக்கி வந்த லாரி, ரயில்வே கேட் மீது மோதியது. இதில் ரயில்வே கேட்டின் கம்பம், திடீரென உயர் மின்னழுத்த கம்பி மீது உரசியபடி நின்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது விழுப்புரத்தில் இருந்து திருப்பதி நோக்கி வந்து கொண்டிருந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வேலூர் டவுன் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. மேலும் சென்னை- பெங்களூரு சாலையில் வாகனங்களும் அணிவகுத்து நின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து ெநரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயர்அழுத்த மின்கம்பி மீது உரசியபடி நின்ற ரயில்வே கேட்டின் கம்பத்தை அப்புறப்படுத்தி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை நேர போராட்டத்திற்கு பிறகு உயர் அழுத்த மின்கம்பி மீது உரசியபடி நின்ற கம்பத்தை அகற்றினர். இதையடுத்து போக்குவரத்து போலீசார், நெரிசலை சீரமைத்தனர். பின்னர் சுமார் 2 மணி நேரத்திற்கு பின் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றது. இந்த விபத்து காரணமாக ரயில் பயணிகளும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது