உபரிநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி தமிழகத்தில் பல்வேறு திட்டங்களால்

வேலூர், ஆக.1: தமிழகத்தில் உபரிநீர் வீணாக சென்று கடலில் கலப்பதை தடுக்க பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே செம்பராயநல்லூர் சமத்துவபுரம் கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் ஆயிரம் மரக்கன்றுகள் வீதம் 247 ஊராட்சிகளில், 2 லட்சத்து 47 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டம், ₹11.97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா ஆகியவை நேற்று நடந்தது. இதில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து, அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தற்போது மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் நீர், விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். சரபங்கா நீரேற்று திட்டம் அதிமுக ஆட்சியில் துவக்கி கைவிடப்பட்டது. அதன்பிறகு திமுக ஆட்சியில்தான் அந்த திட்டம் முழுமையடைந்தது. அந்த திட்டத்தில் கடைசி சில ஏரிகளுக்கு தண்ணீர் ஏற்றுவதில் சில பிரச்னைகள் ஏற்பட்டது. தண்ணீர் எடுத்துச்செல்லும் வழியில் தனியார் நிலங்கள் இருப்பதால் அவர்கள் நிலத்தை வழங்காமல் நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டனர். எனவே சில ஏரிகளை தவிர மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் சென்று கொண்டுதான் இருக்கிறது.

மழைக்காலங்களில் பெருக்கெடுத்து வரும் உபரிநீரை சேமிக்க கூடிய வகையில்தான் சரபங்கா நீரேற்றும் திட்டம், அத்திக்கடவு அவிநாசி திட்டம், காவிரியில் இருந்து குண்டாறுக்கு தண்ணீர் எடுத்துச்செல்லும் திட்டம் மற்றும் நீரேற்று நிலையங்கள் அமைக்கும் திட்டம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் பல இடங்களில் உபரிநீர் வீணாக சென்று கடலில் கலப்பதை தடுத்து விவசாயத்திற்கும், பிற தொழில்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி விவசாய பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்