உன்னத வாழ்வளிப்பான் உளிவீரன்

ஆலமரத்துப்பட்டி, சிவகங்கைவீரத்தின் விளைநிலமான சிவகங்கை சீமையில், குமரன் குன்றிலிருந்து அருளும் குன்றக்குடிக்கு அருகே உள்ளது. ஆலமரத்துப்பட்டி என்ற கிராமம். இந்தக் கிராமத்தின் எல்லையில் கோயில் கொண்டு அருள்கிறார் கட்டுச்சோற்றுக் கருப்பர்.  ஆலமரத்துப்பட்டிக்கு அருகே இருந்த வன்னியன் சூரக்குடியை ஆண்டு வந்த வன்னிய ராஜா வெள்ளை நிற குதிரை ஒன்றை வளர்த்து வந்தார். அதனிடம் அபார சக்தி இருந்தது. இதே காலகட்டத்தில், மலையாள தேசத்தில் குறுநில மன்னனாக திகழ்ந்த உளிவீரன் தனது மந்திர சக்தியின் மூலம் வன்னியராஜாவின் குதிரையைப் பற்றி அறிந்து அதை அபகரித்துச் செல்ல தனது படைகளுடன் புறப்பட்டு வந்தான். வன்னிய ராஜாவுடன் போரிட்டு குதிரையைக் கைப்பற்றுவது இயலாத காரியம் என்பதால், இரவுப் பொழுதில் குதிரையைக் கடத்தத் திட்டமிட்டான் உளிவீரன். அதன்படி, தனது மந்திர சக்தியைப் பயன்படுத்தி அபூர்வக் குதிரையைக் கடத்திக்கொண்டு தனது தேசத்துக்குப்புறப்பட்டான். காயாங்காடு (ஆலமரத்துப்பட்டியை அப்போது காயாங்காடு என்றே அழைத்து வந்தனர்) எல்லையை நெருங்கும்போது பொழுது புலர்ந்தது. விடிந்த பின்னர் பயணத்தை தொடர்வது சரியல்ல, வன்னியராஜா குதிரையை எவராவது பார்த்து விடுவார்கள் என்று அஞ்சிய உளிவீரன், தனது படைகளுடன் காயாங்காட்டிலேயே பதுங்கி இருந்தான். இதனிடையே தனது குதிரை, லாயத்தில் இல்லாததை  கண்ட வன்னியராஜா, குதிரையைத் தேடி வருமாறு படைகளை நாலாபுறமும் அனுப்பினார். அப்போது குதிரையைக் கடத்திச் சென்ற உளி வீரன் படைகளுடன் காயாங்காட்டில் பதுங்கியிருக்கும் விஷயம் தெரியவந்தது. ஆத்திரம் கொண்ட வன்னியராஜா, தனது படைகளுடன் காயாங்காட்டுக்குப் புறப்பட்டார். இதையறியாத உளிவீரனும் அவன் படையினரும் தாங்கள் கொண்டு வந்திருந்த கட்டுச் சோற்றைப் பிரித்துச் சாப்பிட முற்பட்டனர். ஒரு கவளச் சோற்றை அள்ளி வாயில் போடும் நேரத்தில், வன்னியராஜாவின் படையினர் தாக்குதல் நடத்தினர். அதில் உளிவீரனும் அவன் படையினரும் செத்து மடிந்தனர். வன்னியராஜா குதிரையுடன் கோட்டைக்கு திரும்பினார்.மதுரை மீனாட்சியம்மன் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தான் வன்னிய ராஜா. ஒரு நாள் மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்த நாளன்று இரவு கனவில் வன்னி–்யராஜாவுக்கு மீனாட்சி அம்மை காட்சி தந்தாள். ‘‘இனி, என்னைத் தேடி நீ மதுரை வர வேண்டாம். உனது இடத்துக்கு நானே வருவேன்’’ என்று கூறினாள். மகிழ்ச்சி அடைந்த வன்னிய ராஜா, மீனாட்சியம்மன் வருகைக்காக காத்திருந்தார். வன்னியராஜாவுக்கு வாக்கு கொடுத்த நாற்பத்தி ஓராவது நாள் நண்பகல் பொழுதில் தும்மும் போது மீனாட்சி அம்மா என்று கூறினான் வன்னிய ராஜா… மறுகணமே மீனாட்சி அம்மை, ஒரு ஏழை மூதாட்டி உருவெடுத்து வன்னிய ராஜாவின் கோட்டை வாசலுக்கு வந்தாள்.  வந்தது மீனாட்சி அம்மை என்று அறியாத வன்னியராஜா கால் மேல் கால் போட்டு அரியணையில் அமர்ந்தபடியே ‘‘யாரம்மா.. என்ன வேண்டும். எதற்காக என்னை பார்க்க வந்தாய்.’’ என்று கேட்க, ‘‘நீ தானே அழைத்தாய் மகனே’’ என்று கூற, ‘‘நானா? அடுத்த வேளை உணவுக்கு அடுத்தவரிடம் கையேந்தும் நிலையில் நீ இருக்க, அரசாளும் மன்னன் நான். உன்னை அழைத்தேனா, என்ன உளறுகிறாய்’’ என்று ஆணவச் செருக்கில் பேசினான் வன்னியராஜா. இதனால் சினம் கொண்ட மீனாட்சியம்மன், வன்னிய ராஜாவும் அவரது கோட்டை – கொத்தளங்களும் மண் மூடிப்போகும் படி சபித்தாள். அதன்படியே மண் மாரி பெய்து, வன்னிய ராஜாவின் கோட்டை கொத்தளங்கள் அழிந்தன. இதைக் கண்ட காயாங்காட்டு மக்கள், குதிரையை களவாண்ட குற்றத்திற்காக உளி வீரனை கொலை செய்ததால்தான் அவரது ஆவி வன்னியராஜாவின் கோட்டையை அழித்து விட்டது என்று கருதினர்.  ‘வன்னியராஜாவின் தூண்டுதலில் நாமளும் ஏதோ ஒரு வகையில் உளி வீரன் சாவுக்கு காரணமாகிவிட்டோம். நம்மையும், நம் சந்ததிகளையும் உளிவீரன் ஆவி விட்டு வைக்காது என்று காயாங்காட்டு மக்கள் எண்ணினர். அதன் காரணமாக உளி வீரன் இறந்த இடத்துக்குச் சென்று  நடுகல் அமைத்து படையல் போட்டு ‘‘தெரிந்தோ தெரியாமலோ நாங்கள் தவறு செய்திருந்தால், பொறுத்துக் கொள்ள வேண்டும். எங்களையோ எங்களின் சந்ததிகளையோ எதுவும் செய்யக்கூடாது. இனி, நீயும் உனது பரிவாரங்களும் தான் எங்களை எந்தப் பிணியும் அண்டாமல் பாதுகாக்க வேண்டும்’’ என்று வேண்டினர். இதன் பிறகு, ஊருக்குள் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. எனக்கூறப்படுகிறது. அதன் பிறகு உளிவீரனையும் அவன் படையினரையும் காவல் தெய்வமாக வழிபட ஆரம்பித்தனர் காயாங்காட்டு ஊர் மக்கள். நாளடைவில் ஆலத்தி கண்மாய் கரையில் கோயில் எழுப்பினர். கோயிலில் உளி வீரன், லாட சன்னியாசி, அவருக்கு இரு புறமும் மலுக்கன், அரசுமகன், சந்தனக் கருப்பர், தொட்டியான், உளிவீரனின் படைத் தளபதியான கட்டுச் சோற்றுக்கருப்பர், வேடர், செங்கிடாய் கருப்பர், மேலக் கருப்பர், மெய்யம்பெருமாள், சின்னக்கருப்பர், பெரியகருப்பர் மற்றும் தம்பி உளிவீரனைக் காணாமல் மலையாள தேசத்திலிருந்து தேடி வந்த தங்க அம்மன் இங்கேயே தெய்வமாகி விட்டாளாம்! கோயிலில் பனை மரம் ஒன்று நிற்கிறது. கோயிலின் முக்கிய விசேஷங்களுக்கு, இந்த பனை மரத்திடம் குறி கேட்கிறார்கள். அப்போது பல்லி சத்தம் எழுப்பினால் உளிவீரனே சம்மதம் தெரிவித்ததாக நம்பி, விசேஷத்துக்கு நாள் குறிக்கிறார்கள்.மாந்திரீகம் படித்த சாமி என்பதால்… பேய் – பிசாசு, பில்லி – சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால்… உளிவீரன், அந்த தீய சக்திகளை ஓட ஓட விரட்டி விடுவார் என்கிறார்கள்.  இங்கு மாசி சிவராத்திரியை திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். சிவராத்திரி அன்று இரவு 1 மணிக்கு பச்சைப்பயறுகளை அவித்து வைத்தும் பச்சரிசியை ஊற வைத்தும் படையல் வைக்கிறார்கள். மறுநாள் மதியம்… பொங்கலிட்டு, பரங்கிக் காய் சமைத்து, பச்சரிசி மாவு இடித்து வைத்து படையல் போடுகின்றனர்.  கட்டுச் சோற்றுக் கருப்பருக்கு ஆடும் சாமியாடி, பக்தர்களின் குறை தீர அருள்வாக்கு சொல்கிறார். பிறகு, கரும்பு, வாழைப் பழம் போன்றவற்றை உளி வீரனின் பரிவாரங்களுக்கு சூறை விடுவார். இதையடுத்து அவரை, அருகிலுள்ள ஆலத்தி ஐயனார் கோயிலுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கும் பூஜைகள் நடத்தி அருள்வாக்கு சொல்லி விட்டுத் திரும்புகிறார் சாமியாடி.ஆடி மாதம் இங்கு நடக்கும் கொடை விழாவில் ‘கிடா வெட்டு’ படையலும் பிரசித்தியானது. செங்கிடாய்காரனுக்கு செங்கிடாய், கட்டுச்சோற்றுக் கருப்பருக்கு கருங் கிடாய், மெய்ய பெருமாளுக்கு பல நிறத்துக்கிடாய்… என மூன்று விதமான கிடாய்களைக் கோயில் சார்பாக பலி கொடுக்கிறார்கள். இது தவிர, வேண்டுதல் வைத்தவர்களும் தனியே கிடாய் வெட்டி பலி கொடுப்பதும் உண்டு. ஆடியில் வரும் ஏதாவதொரு வெள்ளியன்று இரவு பத்து மணிக்கு இந்த பூஜை தொடங்குகிறது. மற்ற கிடாய்களை வழக்கம்போல் பலி கொடுப்பவர்கள், பல நிறத்துக் கிடாயை மட்டும் வித்தியாசமாக பலியிடுவர். உயிருடன் இருக்கும்போதே, அதன் வயிற்றைக் கிழித்து, ஈரலை எடுத்து சாமிக்கு படையல் வைக்கிறார்கள். பலியிடப்பட்ட மற்ற கிடாய்களை சமைப்பதுடன், பொங்கலிட்டும் படைக்கிறார்கள். வேண்டுதல் வைத்தவர்களால் பலியிடப்படும் கிடாய்களை, அங்கேயே சமைத்துப் பரிமாறிவிட்டு வீடு திரும்புகிறார்கள். உளிவீரனுக்கு மதுபானங்களும் படைக்கின்றனர். இந்தக் கொடை விழா 12 வருடங்களுக்கு ஒருமுறைதான் இங்கு நடக்கிறது.தொகுப்பு: சு.இளம் கலைமாறன்

Related posts

மரண பயம் போக்கும் மயானச்சுடலை

அங்க குறையை நிவர்த்தி செய்வாள் பாலாடை ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி

மாலை சூடும் வரம் தருவாள் மாலையம்மன்