உட்கட்சி பிரச்னைகளை திசை திருப்பவே இல்லாத பிரச்னையை உருவாக்குகிறது அதிமுக: தயாநிதி மாறன் எம்பி பேட்டி

சென்னை: துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1,500 குடும்பங்களுக்கு, திமுக சார்பில் தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி, ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடந்தது. இதில், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் பரிசு பொருட்களை வழங்கினர். அப்போது, பரிசு பொருள் பெற்ற 30 நரிக்குறவர்கள், அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் தயாநிதி மாறன் எம்.பிக்கு, பாசி மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.  பின்னர் தயாநிதி மாறன் எம்.பி நிருபர்களிடம் கூறியதாவது: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசு  தமிழகத்துக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், இதை கண்டித்து வரும் 9ம் தேதி தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட  தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அதிமுக தெரிவித்துள்ளது. மேலும், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசு  கேரளா அரசுக்கு அடிபணிந்து விட்டது, முல்லை பெரியாறு  அணையில்  தமிழகத்திற்குள்ள உரிமையை திமுக அரசு விட்டுக் கொடுத்து விட்டது என்றும் இல்லாத ஒரு குற்றச்சாட்டை அதிமுக முன்வைத்துள்ளது. குறிப்பாக  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இந்த விவகாரத்தில் அறிக்கை மேல்  அறிக்கை விடுத்து வருகிறார். அதாவது, அணையின் நீர்மட்டம் 152 அடியை எட்டினால் மட்டுமே சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு, குடிநீர் தேவைக்கு தண்ணீர் உறுதி செய்யப்படும். ஆனால் தற்போது முல்லை  பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை நெருங்கும் நேரத்திலேயே கேரள அமைச்சர்கள் அதிகாரிகளை சாட்சிக்கு வைத்துக்கொண்டு தமிழ்நாடு அரசு நீரை  வெளியேற்ற உடன்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணை தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இதுபோன்ற செயல்  தமிழகத்தின் உரிமையை கேள்விக்குறியாக்கும் செயல் என அவர் கூறி யுள்ளார்.அதிமுகவில் உச்சகட்ட உட்கட்சி பூசல் நிலவுவதால் அதை மறைப்பதற்காக முல்லை பெரியாறு விவகாரத்தில் இல்லாத பிரச்னையை  அதிமுக உருவாக்குகிறது. முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்து ஏற்கனவே  அமைச்சர் துரைமுருகன் தெளிவாக விளக்கம் அளித்தும், இதுபோன்ற பொய் பிரச்சாரத்தை அதிமுக செய்து வருகிறது. இதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், பகுதி செயலாளர்கள் முரளி, ராஜசேகர், திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை