உடல் தானம் செய்தவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

 

வருசநாடு, ஜூன் 1: மயிலாடும்பாறை அருகே தங்கம்மாள்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட பச்சையப்பாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அழகுமுத்து (43). செங்கல் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி முத்துமாரி (40). இவர்களுக்கு அபிநயா (14), அபினேஷ் (11) என இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த ராஜா என்பவருடன் அழகுமுத்து டூவீலரில் வாய்க்கால்பாறை நோக்கி சென்றுள்ளார். அப்போது அவர்களது பைக் நிலை தடுமாறி விபத்தில் சிக்கியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அழகுமுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அழகுமுத்துவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். அதன்படி மதுரையில் அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. தமிழக அரசு உத்தரவின் படி அழகுமுத்துவின் உடல் நேற்று மாலை அவரது சொந்த ஊரான பச்சையப்பாபுரத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இதில் பெரியகுளம் கோட்டாட்சியர் முத்துமாதவன், துணை வட்டாட்சியர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் மாரிமுத்து, காவல்துறை அதிகாரிகள் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை