Wednesday, July 24, 2024
Home » உடல் எடை குறைப்பது தண்டனை கிடையாது! ஆரோக்கிய வாசலுக்கான வழி

உடல் எடை குறைப்பது தண்டனை கிடையாது! ஆரோக்கிய வாசலுக்கான வழி

by kannappan

நன்றி குங்குமம் தோழி நமக்கு வெள்ளை சர்க்கரை, மைதா, அரிசி போன்ற உணவுப் பொருட்கள் சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு எனத் தெரிந்திருந்தாலும், ஆரோக்கியமான உணவைச் சமைக்க நேரமிருப்பதில்லை. ஆரோக்கியமான உணவு என்றாலே சுவையற்ற பச்சைக் காய்கறிகள்தான் சந்தைகளில் கிடைக்கிறது. சுவை – ஆரோக்கியம் என இரண்டையும் விரும்பும் மக்களுக்காகத் தொடங்கப்பட்டதுதான் ரைட்ஃபிட். அதன் நிறுவனர் ராதா கோவிந்தராஜன் தன் நிறுவனம் உருவான கதையைப் பகிர்கிறார்.‘‘எங்க குடும்பத்தில், நாங்கள் எல்லோருமே நல்ல ஃபூடீஸ். சுவையான உணவைத் தேடிப்போய் சாப்பிடுவோம். அதே சமயம் எல்லோரும் வேலைக்குச் செல்வதால், உணவுப் பழக்கத்திலும், உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்த முடியாமல் சிலர் உடல் பருமனாக இருந்தனர். அதனால் அவர்களுக்கென ஆரோக்கியமாகவும் அதே சமயம் சுவையான உணவையும் வீட்டில் நானே தயாரிக்கத் தொடங்கினேன். மைதா, சர்க்கரை, அரிசி போன்ற பொருட்களைத் தவிர்த்து அதற்குப் பதிலாக சிறுதானியங்களைக் கொண்டு மூன்று வேலையும் வித்தியாசமான சுவையான உணவைத் தயாரித்தேன். இரண்டே மாதங்களில், உடற்பயிற்சி இல்லாமலே 30 கிலோ வரை எடைக் குறைத்தனர்.  எடை குறைக்க நினைப்பவர்கள், முதலில் கவனம் செலுத்த வேண்டியது உணவுக் கட்டுப்பாட்டில்தான். அதே சமயம் எதுவும் சாப்பிடாமல், பட்டினி கிடப்பது, ஒரே வகையான கீரை அல்லது ஜூஸ் மட்டுமே உட்கொண்டு உடல் எடையைக் குறைக்க நினைப்பது நம் ஆரோக்கியத்தைத்தான் கெடுக்கும். உடல் எடையைக் குறைப்பது ஒரு தண்டனைப் போல இருக்கக் கூடாது. அது ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றமாக இருக்க வேண்டும்.முதலில் குடும்பமாகச் சேர்ந்து நாங்கள் தினமும் விரும்பி சாப்பிடும் உணவுகளின் மெனு பட்டியலை உருவாக்கினோம். அதில், உடல் எடையை அதிகரிக்கும் பொருட்களை நீக்கி, அதற்குப் பதிலாக ஆரோக்கியமான பொருளை இணைத்துச் சமைத்துப் பார்த்தோம். இப்படி சில சோதனைகளுக்குப் பின் ஆரோக்கியமான மெனுவை உருவாக்கி, அனைவருமே அதைத் தினமும் பின்பற்ற ஆரம்பித்தோம். பத்து கிலோ வரை என் குடும்ப உறுப்பினர்கள் உடல் எடையைக் குறைத்தனர். இதை பார்த்து நண்பர்கள் பலரும் எங்களிடம் டிப்ஸ் கேட்க ஆரம்பித்தனர்.நமக்குப் பயனளித்த ஒரு விவரத்தை ரகசியமாக வைத்திருந்து என்ன பயன் என நாங்கள் பின்பற்றிய உணவு முறையை அப்படியே நண்பர்களுக்குத் தெரிவித்தோம். அதை முயன்று பார்த்தவர்கள் அனைவரும் உடல் எடையை எளிதில் குறைத்தனர். ஒருவர் எழுபது கிலோ வரை உடல் எடையைக் குறைத்திருந்தார்.ஆனால், பலரும் சொன்ன ஒரே விஷயம், வீட்டில் ஒருவர் மட்டும் எடை குறைய ஒரு உணவும், மற்றவர்களுக்குச் சாதாரண உணவும் என இரண்டு சமையல் செய்வது கடினமாக இருக்கிறது என்பதுதான். சிலர், எங்களிடம், ‘நீங்களே சமைத்துக் கொடுத்தால் என்ன’ என்றும் கேட்க ஆரம்பித்தார்கள்.அந்த சமயம் கொரோனா வந்தது. பலரும் வீட்டிலேயே முடங்கிப் போனோம். அந்த நேரத்தைப் பயன்படுத்தி, வீட்டில் சலித்துப் போய் உட்கார்ந்திருந்த குடும்பத்தினர், நண்பர்களின் உதவியுடன் ரைட்ஃபிட் என்ற ஆரோக்கியமான உணவைத் தயாரிக்கும் கிச்சனை உருவாக்கினோம்.இப்போது ஆழ்வார்பேட்டையில் நாங்கள் உணவுத் தயாரிக்க ஒரு சமையலறை இருக்கிறது. முறையான சான்றிதழ்கள், உயர் தரமான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அதை இயக்கி வருகிறோம். சைவ – அசைவ உணவுகளுக்கு தனித்தனியான சமையலறை அமைத்திருக்கிறோம். தினமும் காலையில் ஃப்ரெஷ்ஷான காய்கறிகள், இறைச்சிகளை வாங்கி, வீட்டில் தயாரிப்பது போல, சுடச்சுட தயாரிக்கிறோம். கொரோனாவில் வேலையிழந்த சில ஐந்து நட்சத்திர உணவகங்களின் செஃப்கள், ஹெட் செஃப்பாக பல வருடம் பணியாற்றியவர்கள், குக்கீஸ், கேக், சாக்லெட் போன்ற பேஸ்ட்ரி உணவுகளைத் தயாரிக்கத் திறமையான ஒரு ஹோம்-செஃப்பையும் எங்கள் குழுவில் இணைத்து உணவுத் தயாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளோம்.  இப்போது சென்னை முழுவதும் எங்கள் உணவை டெலிவரி செய்து வருகிறோம். பலரும் உடல் எடையைக் குறைக்க, உடல் எடையை அதிகரிக்க மற்றும் பொதுவாக ஆரோக்கியமான உணவு வேண்டும் என்றும் வருகிறார்கள். எங்களுடன் இணைய வரும் வாடிக்கையாளர்களிடம், அவர்களின் உடல் ஆரோக்கியத்தை முதலில் சோதித்து, அவர்களுக்கு இருக்கும் அலர்ஜி, நோய், பிடித்த சுவை எனப் பல விவரங்களைச் சேகரித்த பின்னரே அவர்களுக்கான பிரத்யேக மெனுவை உருவாக்குவோம்.எட்டு மணி நேரம் சாப்பிட்டு பதினாறு மணி நேரம் சாப்பிடாமல் இருக்கும் பழக்கத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இந்த முறையைச் சரியாகப் பின்பற்றினால் வெகுவாக உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக வாழலாம்” எனக்கூறும் ராதா, ரைட்ஃபிட்டில் அவர் வழங்கும் உணவுகள் குறித்து விளக்குகிறார்.“முதல் ஒரு மாதத்திற்கு, உங்கள் உடலில் இருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றி, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கு உங்கள் உடல் பழக நேரம் தருவோம். இதனால் உங்கள் உடல் ஒரு மாதத்திற்குப் பின் குறைந்த கார்போஹைட்ரேட்டில் இயங்க தயாராகிவிடும். இந்த டையட்டில் வெறும் பச்சைக் காய்கறிகள் இருக்கப் போவதில்லை. மாறாக, சுவையான சூப்கள், தென்னிந்திய உணவு வகைகள், மகாராஷ்டிர உணவு வகைகள், வட இந்திய, சீன, தாய், இத்தாலியன் உணவு வகைகளுடன், கேக் – குக்கீஸ் கூட ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்பட்டு மெனுவில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த உணவுகளை வீகன், சைவம், அசைவம் எக்ஜெட்டேரியன் (முட்டை  மட்டும்) போன்ற டயட் வகைகளுக்கு ஏற்ப தயாரிக்கிறோம். இதில் கண்டிப்பாக ஒரு காய் வகை, புரதச் சத்து (சிக்கன், முட்டை, பனீர், டோஃபூ) ஒரு நாளில் நூறு கிராம் கார்போஹைட்ரேட்டிற்கு குறைவான உணவுதான் வழங்கப்படும்.  இவற்றை மாதாந்திர சப்ஸ்க்ரிப்ஷனில் தினமும் மூன்று வேளையும் வாங்கிக்கொள்ளலாம். அல்லது தினமும் ஒரு வேளை மட்டும் சாப்பிடலாம். இதை ஒரு முறை முயன்று பார்க்க நினைப்பவர்களும், ஸ்விக்கி – சோமேடோ போன்ற உணவு டெலிவரி தளங்களிலிருந்து ஆர்டர் செய்து சுவைத்துப் பார்க்கலாம். ஆரோக்கியமான பிட்சா, மோமோஸ், சிக்கன் ஃப்ரைட் ரைஸ், அடை, பொடி தோசை, முட்டை குழம்பு என நாம் தினமும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் வெள்ளை அரிசி, மைதாவைத் தவிர்த்து, சிறுதானியங்கள், காய்கறிகள் போன்ற சத்தான உணவுப்பொருட்களைக் கொண்டு தயாரிப்பதால், அதே சுவையில் ஆரோக்கியமான உணவு கிடைத்துவிடுகிறது.பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம், டைப் – 2 சக்கரை நோய், தைராய்டு, ரத்த அழுத்த நோயாளிகளுக்கும் தினமும் சிறப்பான உணவை வழங்குகிறோம். வயதானவர்கள், இதய  நோயாளிகள், சிறு வயதில் அதிக உடல் பருமனுடன் அவதிப்படும் குழந்தைகளுக்கும் நாங்கள்  பிரத்யேக உணவு தயாரிக்கிறோம்.பலரும் எடைக் குறைத்த பின்னரும், ஆரோக்கியமான உணவு வேண்டும் எனத் தினம் ஒரு வேளை மட்டும் உணவு வாங்குகிறார்கள். ஐ.டி ஊழியர்களுக்கு சத்தான வீட்டு சாப்பாடு, குழந்தைகளுக்கு ரசாயனம் இல்லாத ஆரோக்கிய உணவு, முதியவர்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு என வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உணவுகளை தயாரித்து அவர்களின் வீடோ அல்லது அலுவலகத்திற்கு டெலிவரி செய்கிறோம். தற்போது சென்னையில் மட்டுமே ரைட்ஃபிட் இயங்கி வருகிறது. ஆனால் சமூகவலைத்தளம் மூலம் எங்களைப் பற்றி தெரிந்துக் கொண்டு தமிழ்நாட்டில் இருந்து பல மாவட்டங்களில் இருந்து எங்களின் சேவை அவர்களுக்கும் தேவை என்று கேட்கிறார்கள்.தற்போது எங்களால் அவர்களுக்கு உணவு வழங்க முடியாது என்பதால், கோச் ஃபிட் என்ற நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தினோம். இதன் மூலம் திண்டுக்கல்லில் இருக்கும் ஒருவர், தன்னுடைய உடல்நிலை குறித்த முழு விவரங்களை அனுப்பியவுடன், எங்கள் நிபுணர் குழுவினர்களால் அவர்களுக்கான ஒரு டயட் திட்டம் உருவாக்கப்படும். அதில் மெனுவுடன் அந்த உணவை எப்படி வீட்டிலேயே தயாரிக்கலாம் என்ற செயல்முறையும் இருக்கும். பிறகு அவரை தொடர்ந்து கண்காணிப்போம். இந்த கோச் ஃபிட் நிகழ்ச்சிக்கு 750 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அதே போலச் சென்னையில் வசிப்பவர்கள் மூன்று வேளைக்கும் தேவையான உணவிற்கான மாத சந்தாவில் இணையலாம். ஒரு வேளைக்கு ரூபாய் 120 விகிதம் மாதக் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு வேளை மட்டும் உணவு வேண்டும் என்பவர்களுக்கு மாதம் 3500 ரூபாயில் உணவு வீடு/அலுவலகம் தேடி வந்துவிடும். எங்கள் குடும்ப உறுப்பினர்கள் பலரும் ஊட்டச்சத்து, உணவு முறைகளில் பயிற்சி பெற்றுள்ளோம். எங்களது ஊழியர்களையும் முறையான பயிற்சி வகுப்புகளில் இணைத்து பயிற்சி பெற்ற பின்னரே உணவு தயாரிப்பில் ஈடுபடுத்துகிறோம்.எங்களின் ஆரோக்கியமான பயிற்சியைக்  கவனித்து, சில மகளிர் மகப்பேறியல் மருத்துவர்களும் அவர்களின் பெண் நோயாளிகளுக்கு எங்கள் அமைப்பைப் பரிந்துரைத்து வருகின்றனர். பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோமில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உணவு முறையிலும், அவர்களது அன்றாட வாழ்க்கையில் ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றும் போதும் விரைவில் குணமடைகின்றனர். ஒரு பெண் நான்கு, ஐந்து மாதங்களாக மாதவிடாய் இல்லாமல் எங்களிடம் வந்தார். ரைட்ஃபிட் உணவைச் சாப்பிட ஆரம்பித்த மூன்றாவது நாளில் அவரின் மாதவிடாய் சுழற்சி சரியாகியது. எனவே குழந்தையின்மை, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி போன்ற சிக்கல்களைச் சந்திக்கும் பெண்களுக்கு ரைட்ஃபிட்  துணையாக இருந்து பலனளித்து வருகிறது.இன்று பல பெண்களும் ஆரோக்கியம் சார்ந்த அழகை விரும்புகிறார்கள். அதே போல, அறுபதிலும் ஆரோக்கியமாக இயங்க வேண்டும் என்றும், திருமணத்திற்கு முன் இரண்டு மாதத்திற்குள் எடை குறைக்க வேண்டும், ஆரோக்கியமான முறையில் எடை அதிகரிக்க எனப் பல காரணங்களுக்காக நிறைய பெண்கள் எங்களை நாடுகிறார்கள்” என்கிறார் ராதா.இன்று பல குழந்தைகள் – சாக்லெட், பிஸ்கெட் என மைதாவும், வெள்ளைச் சர்க்கரையும் சேர்க்கப்பட்ட தின்பண்டங்களை விரும்பி சாப்பிடுகிறார்கள். பெற்றோர்களுக்கு அதனால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணர்வு இருந்தாலும், அதற்கு மாற்றான சுவையான சத்தான உணவை வாங்கித்தர முடியவில்லை. அதனால் எதிர்காலத்தில் குழந்தைகளுக்காக இயற்கையாக தயாரித்த தின்பண்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளனர் ரைட்ஃபிட் குழுமத்தினர்.தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்படங்கள்: ஜி.சிவக்குமார்

You may also like

Leave a Comment

2 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi