உடல் உறுப்புகள் தானம் வழங்கிய தொழிலாளிக்கு அரசு மரியாதை

 

பூந்தமல்லி, ஜூலை 29: பூந்தமல்லி, கரையான்சாவடி முருகேசன் தெருவை சேர்ந்தவர் துரைமுருகன் பாபு (37). இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கார் கம்பெனியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்த துரைமுருகன் பாபு, கடந்த 20ம் தேதி வீட்டின் 2வது மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு, சிகிச்சை பலனின்றி துரைமுருகன் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தாக மருத்துவர்கள் அறிவித்தனர். அதன்பேரில் இறந்த துரைமுருகன் பாபுவின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. பிறகு இறுதி சடங்கிற்காக கரையான்சாவடி, முருகேசன் தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கு உடல் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் தியாகத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்பேரில் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய துரைமுருகன் பாபுவின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தும் விதமாக திருவள்ளூர் கோட்டாட்சியர் ஏ.கற்பகம், பூந்தமல்லி வட்டாட்சியர் ரா.கோவிந்தராஜ் ஆகியோர் நேரில் சென்று தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மேலும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியின்போது வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் உறவினர்கள் உடனிருந்தனர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து