உடலியக்க குறைபாடு உடையோர் கல்வி உதவித்தொகை பெற அழைப்பு

திருச்சி. ஜூலை 5: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக கல்வி பயிலும் உடலியக்க குறைபாடு உடையோர், பார்வையற்றோர், காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயில்பவா்களுக்கு ₹2000ம், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ₹6000ம், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ₹8000ம், இளங்கலை மற்றும் பட்டயப்படிப்பு ₹12000ம், முதுகலை பட்டம் ₹14000ம் என கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பார்வையற்றோருக்கு கல்வி உதவித்தொகையுடன் வாசிப்பாளா் உதவித்தொகையாக 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ₹3000ம், இளங்கலை பட்டம் ₹5000ம் மற்றும் முதுகலை பட்டம் பயில்பவா்களுக்கு ₹6000ம் சோ்த்து வழங்கப்பட்டு வருகிறது.

தகுதியுள்ள கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மற்றும் மாணவியா்கள் கல்வி பயிலும் நிறுவனத்திடமிருந்து சான்றொப்பம் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை(UDID) மற்றும் ஆதார் அட்டை, 9ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வி பயில்பவராக இருந்தால் கடந்த ஆண்டின் மதிப்பெண் சான்று மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் www.tnsevai.tn.gov.in/citizen/Registrstion.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு திருச்சி கண்டோண்மென்ட் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக பின்புறத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலோ அல்லது 0431 2412590 என்ற அலுவலக தொலைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்ற தகவலை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை