உடன்குடி பஜார் பகுதியில் இரவில் சாலையை ஆக்கிரமிக்கும் கால்நடைகளால் விபத்து அபாயம்

உடன்குடி : உடன்குடி பஜார் பகுதிகளை இரவில் ஆக்கிரமிக்கும் கால்நடைகளால் விபத்து அபாயம் தொடர்கிறது. இதனால் அவதிப்படும் வாகன ஓட்டிகள், இதை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான உடன்குடியையொட்டி அனல்மின்நிலையம், துறைமுகம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் உடன்குடியைச் சுற்றிலும் பள்ளி, கல்லூரிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. மேலும் உடன்குடியைச் சுற்றியுள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட குக்கிராம மக்கள்  தங்களது அவசிய தேவைக்கு இங்குதான் வரவேண்டி உள்ளது. இதனால் சத்யமூர்த்தி பஜார், குலசேகரன்பட்டினம் ரோடு, பரமன்குறிச்சி ரோடு, தாண்டவன்காடு, ரோடு, திசையன்விளை ரோடு, மெயின் பஜார் என அனைத்து பகுதிகளிலும் வாகன போக்குவரத்துக்கு எப்போதும் பஞ்சம் இராது.இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அனைத்துச் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். சாலைகளை ஆக்கிரமிக்கும் கால்நடைகள் படுத்து கிடப்பது தெரியாமல் டூவிலர் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வருவோர் மோதி விபத்துக்கு உள்ளாவது தொடர்கதையாகிறது.குறிப்பாக இரவில் இருளில் சாலையில் கிடக்கும் கால்நடைகளால் வாகனஓட்டிகள் மோதி விபத்துக்கு உள்ளாவதோடு ஒரு சில வேளையில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதனால் அவதிப்படுவோர் இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் பலனில்லை. எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள், விபத்துகளை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்….

Related posts

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மெயின் தேர்வு தொடங்கியது: தமிழகத்தில் 650 பேர் பங்கேற்றனர்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை இருமடங்கு உயர்வு: ரூ.14.90 கோடி வரை உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் எம்.ஆர்.சேகர் மீண்டும் சிறையில் அடைப்பு