உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள நிபுணர்குழு பரிந்துரைக்கும்வரை தமிழகம், புதுச்சேரிக்கு உடனடியாக ஆக்சிஜன், மருந்து சப்ளை செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது. தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், சுகாதாரத் துறையின் கூடுதல் அறிக்கையை தாக்கல் செய்தார். அவர் வாதிடும்போது, தமிழகத்தில் தற்போது கூடுதலாக 12 ஆயிரம் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உருவாக்கப்பட்டு, அதில் 5592 படுக்கைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதிய பின் தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 419 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தின் தேவை 475 மெட்ரிக் டன் என்பதால் இப்போதும் பற்றாக்குறையாகத்தான் உள்ளது. இந்த மாத இறுதியில் ஆக்சிஜன் தேவை 800 மெட்ரிக் டன்னாக இருக்கும். 3 லட்சத்து 50 ஆயிரம் குப்பி ரெம்டெசிவர் மருந்துகள் கோரிய நிலையில், 2.05 லட்சம் குப்பிகள் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, சேலம், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.தடுப்பூசி மருந்தைப் பொறுத்தவரை 76.99 லட்சம் டோஸ்கள் அனுப்பப்பட்டு, 64.13 லட்சம் டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 18 வயதுக்கு மேல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்காக 13.85 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து சப்ளைக்கு ஆர்டர் கொடுத்துள்ள நிலையில், 5 லட்சம் டோஸ்கள் பெறப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் 12 மாவட்டங்களில் சித்தா, ஆயுர்வேதா மருத்துவ மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் ஆக்சிஜன், தடுப்பூசி மருந்து, ரெம்டெசிவிர் மருந்து சப்ளை தொடர்பாக பரிந்துரைகளை வழங்க உச்ச நீதிமன்றம் தேசிய நிபுணர் குழுவை அமைத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் மே 15ம் தேதி முதல் 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும்.தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கொரோனா பரவல் குறையும் என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அரசு, சுகாதார துறை செயலாளரை மாற்றாமல் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதை பாராட்டுகிறோம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கிறது. தற்போதைய நிலவரப்படி 1.25 லட்சம் பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகள், கிளினிக்குகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தியுள்ளவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் சில நாட்களில் தமிழகத்தின் ஆக்சிஜன் தேவை 800 மெட்ரிக் டன் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு மாவட்டங்களுக்கு தேவையான ஆக்சிஜன் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து செல்வது தாமதத்தை ஏற்படுத்தும் என்பதால் மத்திய, மாநில அரசுகள் இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ராணுவ தளவாட ஆராய்ச்சி மையமான டி.ஆர்.டி.ஓ வின் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதியை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள நிபுணர் குழு பரிந்துரை அளிக்கும் வரை தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஆக்சிஜன், தடுப்பூசி மருந்து மற்றும் ரெம்டெசிவிர் மருந்துகள் சப்ளைக்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்றாவது அலை தாக்கும் என்ற அச்சம் நிலவுவதால் அதை எதிர்கொள்ளவும், தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் உதவியாளர்கள் இருக்க மாட்டார்கள் என்பதால், மருந்துகளை நேரடியாக அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கலாம் என்றும் உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.* செங்கல்பட்டு தடுப்பூசி மையத்துக்கு டெண்டர்ஐகோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையின்போது, மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, செங்கல்பட்டு மற்றும் குன்னூர் தடுப்பூசி உற்பத்தி மையங்களை  உடனடியாக தொடங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.இதற்கு பதிலளித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர டெண்டர் கோரப்பட்ட நிலையில், எவரும் விண்ணப்பிக்கவில்லை. எனவே,  விண்ணப்பிப்பதற்கான தேதி இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குன்னூர் தடுப்பூசி உற்பத்தி மையத்தில் பாக்டீரியாவுக்கு மட்டும் மருந்து தயாரிக்கப்படுவதால், அங்கு கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய இயலாது என்று  குறிப்பிட்டார்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு