உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மருத்துவப்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்நாட்டுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்!: ஐகோர்ட்டில் திமுக விளக்கம்..!!

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மருத்துவப்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்நாட்டுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2020ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கானது தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வு முன்பு இன்று நடைபெற்றது. அச்சமயம் திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாகவும், இந்த இடஒதுக்கீடு என்பது ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தமிழக கல்லூரிகளுக்கு பொருந்தாது எனவும் வாதிட்டார். அப்போது அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை மத்திய அரசுக்கு வழங்கிய பின், மாநில அரசு எப்படி இடஒதுக்கீடு பெறமுடியும் என தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது. மத்திய அரசு தான் இதுகுறித்து முடிவு செய்ய முடியும் எனவும் தமிழக இடஒதுக்கீடு அமல்படுத்த கூறமுடியாது எனவும், அந்த இடங்கள் மாநிலங்களுக்கு திரும்ப வழங்கப்பட்டால் மட்டுமே தமிழக அரசு இடஒதுக்கீட்டை பின்பற்றமுடியும் எனவும் தெரிவித்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்த மூத்த வழக்கறிஞர் வில்சன், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று உள்ளது. எனவே அந்த உத்தரவை தான் அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கிடையே மத்திய அரசு சார்பில் ஆஜரான நடராஜன் என்பவர், மருத்துவ படிப்புகளில் அனைத்து மாநில மாணவர்களும் பயனடைய உச்சநீதிமன்ற உத்தரவுப்படிதான் அகில இந்திய ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டதாகவும், தகுதி அடிப்படையில் மட்டுமே அந்த இடங்கள் நிரப்பப்படுவதாகவும், 2007 – 2008ம் ஆண்டு முதல் பட்டியல் இனத்தவருக்கு 15 சதவீதமும், பழங்குடியினருக்கு 7.5 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக தெரிவித்தார். தொடர்ந்து வழக்கின் விசாரணை என்பது வருகின்ற திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்