‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் கலெக்டர்கள் தலைமையில் மாவட்ட ரீதியாக ஒருங்கிணைப்பு குழு: சிறப்பு அலுவலர் உத்தரவு

சென்னை: ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்தும் விதமாக மாவட்ட ரீதியாக கலெக்டர்கள் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அத்துறையின்  சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது.  இந்த துறைக்கு சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டார். கடந்த 9ம் தேதி அவரிடம் அனைத்து மனுக்களும் ஒப்படைக்கப்பட்டன. சுமார் 4 லட்சம் மனுக்கள் இதுவரை இத்துறையில் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட அனைத்து மனுக்களும் மாவட்ட வாரியாக,  பிரிக்கப்பட்டு தமிழ்நாடு மின் ஆளுமை மூலம் பராமரிக்கப்படும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதுவரை சுமார் 70 ஆயிரம் மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனுவும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் தனித்தன்மையுடன் கூடிய அடையாள எண் வழங்கப்பட்டு, அடையாள எண்ணுடன் கூடிய குறுஞ்செய்தி  மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது.மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதன் உண்மை தன்மைக்கேற்றவாறு தகுதியான ஒவ்வொரு மனுவும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உடனடி தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளை மாவட்ட அலுவலர்கள்  மேற்கொள்கிறார்கள். அந்தவகையில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், தேனி ஆகிய 6 மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட 549 மனுக்களின் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ எனும் புதிய துறையை மேலும் சிறப்பாக செயல்படுத்தும் விதமாக மாவட்ட ரீதியாக ஒருங்கிணைப்புக் குழு அமைக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அத்துறையின் சிறப்பு அலுவலர்  ஷில்பா பிரபாகர் சதீஷ் கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: 7.5.2021ல் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை முதலமைச்சரால் உருவாக்கப்பட்டது. இத்துறையினை சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கென ஒரு  ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட வேண்டுமென அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  அதற்கேற்றவாறு, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையின் கீழ் அமைக்கப்படும் ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டங்கள்) மற்றும் மின் மாவட்ட  மேலாளர் ஆகியோர் உள்ளடக்கி அமைக்கப்பட வேண்டும். இப்பணியை சிறப்பாக செயல்படுத்திட கூடுதல் அலுவலர்கள் தேவைப்படின் மாவட்ட ஆட்சித் தலைவரே இக்குழுவில் சேர்த்துக்கொள்ளலாம். ஒவ்வொரு அலுவலகத்திலும் இத்திட்டத்திற்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுடைய விவரங்கள் (பெயர், பதவி, அலுவலக முகவரி, தொலைபேசி/ கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி) ஆகியவற்றை utmtamilnadu@gmail.com என்ற  மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறது. அந்தந்த அலுவலகத்தில் பெறப்படும் மனுக்களுக்கு அவ்வலுவலர்களே பொறுப்பாவார்கள். ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் பெறப்படும் அனைத்து  மனுக்களும் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு முழுமையான முறையில் முடிவுக்கு கொண்டுவர கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு