உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் கலெக்டர் அதிரடி ஆய்வு

 

மேட்டுப்பாளையம், பிப்.3: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் என்ற அடிப்படையில் \” உங்களைத்தேடி உங்கள் ஊரில்\” என்ற புதிய திட்டத்தின் படி ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும் இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் காலை 9 மணி முதல் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி மேட்டுப்பாளையம் தாலுகா அளவில் பல்வேறு அரசு அலுவலகங்கள், வளர்ச்சித்திட்ட பணிகள் உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மற்றும் மனுக்களையும் பெற்று கொண்டார்.

தொடர்ந்து நேற்று காலை முதலே மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள உழவர் சந்தை, நடூர் பகுதியில் முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் சிற்றுண்டி சமைக்கும் இடம் உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அதிகாரிகளுக்கு அவர் பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்தார்.

உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை நேரில் சந்தித்த அவர் அவர்களின் குறையை கேட்டறிந்தார். இதேபோல், மேட்டுப்பாளையம் சங்கர் நகர் பகுதியில் உள்ள வள்ளுவர் அரசு துவக்கப்பள்ளியில் பள்ளி மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை சிற்றுண்டி சாப்பிட்டார். இந்நிகழ்ச்சிகளின் போது மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி, துணை தலைவர் அருள் வடிவு முனுசாமி, கமிஷனர் அமுதா, கோட்டாட்சியர் கோவிந்தன், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுரேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு