உக்ரைன் – ரஷ்யா போரால் வரத்து பாதிப்பு சமையல் எண்ணெய் விலை கடும் உயர்வு: லிட்டர் ரூ.180 ஆக அதிகரிப்பு

சேலம்: உக்ரைனில் நடந்து வரும் போரால் சமையல் எண்ணெய் வரத்து சரிந்துள்ளது. இதனால் சூரியகாந்தி ஆயில் லிட்டர் ₹180 ஆக அதிகரித்துள்ளது. பாமாயில் விலையும் தற்போது ₹170 ஆக உயர்ந்துள்ளதாக  வியாபாரிகள் தெரிவித்தனர்.இந்தியாவில் சூரிய காந்தி உள்பட சமையல் எண்ணெய்களின் தேவையை ரஷ்யா, உக்ரைன் நாடுகள் 75 சதவீதத்திற்கு மேல் பூர்த்தி செய்கிறது. இந்நிலையில் கடந்த பிப்.24 முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் ெதாடுத்து வருகிறது. இதனால் அங்கு சமையல் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. போர் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே சமையல் எண்ணெய் விலை உயர்ந்தது. போர் தொடங்கிய பிறகு  ரஷ்யா, உக்ரைனில் இருந்து இந்தியாவிற்கு வரவேண்டிய சமையல் எண்ணெய் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக எண்ணெய் விலை படிப்படியாக உயர்ந்துள்ளது. தற்போது சன்பிளவர் ஆயில் லிட்டர் ₹180 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து சேலத்தை சேர்ந்த மளிகை வியாபாரிகள் கூறியதாவது: உலகளவில் சமையலுக்குத் தேவையான எண்ணெய்யை ரஷ்யா, உக்ரைன், இந்தோனேஷியா, மலேசியா உள்பட பல்வேறு நாடுகள் உற்பத்தி செய்கிறது. அங்கிருந்து இந்தியாவுக்கு தேவையான எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. உக்ரைனில் நடந்து வரும் போரால் அங்கு சமையல் எண்ணெய் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து வரவேண்டிய எண்ணெய் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. கடந்த ஒன்றரை வாரத்திற்கு முன்பு லிட்டர் ₹140க்கு விற்ற சமையல் எண்ணெய் (சூரியகாந்தி ஆயில்) தற்போது லிட்டருக்கு ₹40 அதிகரித்து ₹180 என்று விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் சில்லரை விற்பனை கடைகளில் இந்தவிலை மேலும் அதிகரித்துள்ளது. சில்லரையில் தற்போது லிட்டர் ₹196 வரை விற்கப்படுகிறது. மேலும் லிட்டர் ₹125க்கு விற்கப்பட்ட பாமாயில் விலையும் தற்போது ₹170 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர மாவட்டம் தோறும் நிலையான விலை இல்லாமல் விலை உயர்த்தப்படுகிறது. இதில் பாமாயிலை பொறுத்தவரை மலேசியா, இந்தோனேசியா நாடுகளில் இருந்து தான், அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனாலும் உக்ரைன் போரை காரணம் காட்டி இந்த நாடுகள் ஏற்றுமதியை நிறுத்தியுள்ளது. கடந்த ஒன்றரை வாரமாக ரஷ்யா, உக்ரைனில் இருந்து எண்ணெய் வரவில்லை. தற்போது இருப்பில் உள்ள எண்ணெய் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இருப்பில் உள்ள எண்ணெய் குறைவதால், விரைவில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு சில வியாபாரிகள் மொத்தமாக விற்பனை செய்யாமல் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு ஒரு லிட்டர் முதல் மூன்று லிட்டர் வரை மட்டுமே விற்பனை செய்கின்றனர். இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு காரணமாக இல்லத்தரசிகள் வேதனை அடைந்துள்ளனர். விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்….

Related posts

இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக பதிவிட்ட பாஜக பிரமுகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

முண்டந்துறை வனப்பகுதியில் சாலை அமைக்காதது ஏன்? : ஐகோர்ட்

இளைஞர்களை தாக்கிய வழக்கில் பாடகர் மனோவின் மகன்கள் 2 பேருக்கு நிபந்தனை முன்ஜாமின்!